நீச்சல் குளத்தில் மூழ்கி 2 மாணவர்கள் சாவு

தாவணகெரே டவுனில் நீச்சல் குளத்தில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-05-20 18:45 GMT

சிக்கமகளூரு:

தாவணகெரே டவுனில் நீச்சல் குளத்தில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தண்ணீரில் மூழ்கினர்

தாவணகெரே டவுன் பி.டி. லே-அவுட் பகுதியை சேர்ந்தவர்கள் தாஜூதீன் (வயது 16), முபாரக் (15). இவர்கள் 2 பேரும் அந்தப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தனர். இந்த நிலையில், பள்ளி கோடை விடுமுறை என்பதால் 2 பேரும் நேற்று முன்தினம் தேவராஜ் அர்ஸ் படாவனே பகுதியில் உள்ள நீச்சல் குளத்துக்கு குளிக்க சென்றனர்.

அவர்கள் நீச்சல் குளத்தில் குளித்து கொண்டிருந்தபோது, ஒருவர் பின் ஒருவராக தண்ணீரில் மூழ்கினர். இதனால் அவர்கள் தண்ணீரில் தத்தளித்தப்படி இருந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதியில் இருந்தவர்கள் விரைந்து வந்து 2 பேரையும் காப்பாற்ற முயன்றனர்.

2 பேர் சாவு

ஆனாலும் அதற்குள் 2 பேரும் அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் தாவணகெரே டவுன் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், தீயணைப்பு படையினர் உதவியுடன் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனைக்கு பிறகு 2 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 2 பேரின் உடல்களையும் பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். மேலும் நீச்சல் குளத்தில் போதிய பாதுகாப்பு வசதி இல்லாததால் தான் மாணவர்கள் 2 பேரும் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

போலீஸ் விசாரணை

இதையடுத்து போலீசார், நீச்சல் குளம் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். இதுகுறித்து தாவணகெரே டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்