பெண்கள் குழந்தை பெறும் இயந்திரம் அல்ல: சர்ச்சை கருத்து குறித்து சாக்‌ஷி மகராஜ் பதில்

பெண்கள் குழந்தை பெறும் இயந்திரம் அல்ல எனவும் தான் எந்த மதத்தின் பெயரையும் குறிப்பிட்டு பேசவில்லை என்று பாஜக எம்.பி சாக்‌ஷி மகராஜ் தெரிவித்தார்.

Update: 2017-01-11 06:38 GMT
புதுடெல்லி

பெண்கள் குழந்தை பெறும் இயந்திரம் அல்ல எனவும் தான் எந்த மதத்தின் பெயரையும் குறிப்பிட்டு பேசவில்லை என்று பாஜக எம்.பி சாக்‌ஷி மகராஜ் தெரிவித்தார்.

பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்தவர் சாக்‌ஷி மகராஜ்.  உன்னோ பாராளுமன்ற தொகுதி எம்.பியான இவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்துவதை வாடிக்கையாக கொண்டவர். உத்தர பிரதேசத்தில் பிப்ரவரியில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்குள்ள மீரட்டில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட  சாக்‌ஷி மகராஜ், நாட்டில் மக்கள் தொகை பெருகி வருவதற்கு முஸ்லீம்கள் தான் காரணம் என்று மறைமுகமாக தெரிவித்தார்.”

‘நாட்டில் பெருகிவரும் மக்கள்தொகைக்கு இந்துக்கள் காரணமல்ல, 4 மனைவிகளின் மூலம் 40 பிள்ளைகள் வரை ஒருவர் பெற்றுக் கொள்ளலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ள மதத்தை சேர்ந்தவர்கள்தான் காரணம். மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும்’ என அவர் தனது பேச்சுக்கு இடையில் குறிப்பிட்டார். சர்ச்சைக்குரிய இந்த பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

மதம், சாதி, வகுப்புவாதம் போன்றவற்றை மையப்படுத்தி, தேர்தல்களை அணுக கூடாது. எந்தப் பிரிவினரையும் இலக்காக்கி தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட கூடாது என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில் இந்த உத்தரவுக்கு மாறாக சாக்‌ஷி மகராஜ் பேசியதாக தெரிவித்தனர். இந்நிலையில், மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பேசியதாக சாக்‌ஷி மகராஜ் மீது, மீரட்டில் உள்ள சதார் பஜார் காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதிவு  செய்யப்பட்டது. 

சர்ச்சைக்குரிய கருத்து குறித்து விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையமும் சாக்‌ஷி மகராஜுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதையடுத்து  இன்று தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு சாக்‌ஷி மகராஜ் சென்றார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சாக்‌ஷி மகராஜ், “ துறவிகள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் தான் நான்பேசினேன். அது தேர்தல் பொதுக்கூட்டம் அல்ல. எந்த ஒரு மதத்தின் பெயரையும் குறிப்பிடவில்லை. எந்த ஒரு தவறான கருத்தையும் பதிவு செய்யவில்லை. மக்கள் தொகை கண்டிப்பாக கட்டுப்படுத்த வேண்டும். பெண்கள் குழந்தை பெறும் இயந்திரம் அல்ல” இவ்வாறு அவர் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்