நெடுஞ்சாலை அருகே உள்ள மதுக்கடைகளை மூடும் உத்தரவில் திருத்தம் கோரி தமிழக அரசு மனு

நெடுஞ்சாலை அருகே உள்ள மதுக்கடைகளை மூடும் உத்தரவில் திருத்தம் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்ததுள்ளது.

Update: 2017-03-23 23:00 GMT

புதுடெல்லி

நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் இருக்கும் அனைத்து மதுக்கடைகளையும் ஏப்ரல் 1–ந் தேதி முதல் மூட வேண்டும் என்று கடந்த டிசம்பர் 15–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

அத்தகைய கடைகளுக்கு மார்ச் 31–ந் தேதிக்குப் பிறகு உரிமத்தை புதுப்பிக்கக்கூடாது என்றும், மதுக்கடைகளை அடையாளம் காட்டும் நெடுஞ்சாலையோர வழிகாட்டி பலகைகளுக்கு தடை விதித்தும் உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த உத்தரவில் திருத்தம் செய்யக்கோரி, தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில வாணிப கழகம் (டாஸ்மாக்) தாக்கல் செய்துள்ள அம்மனுவில், ‘நெடுஞ்சாலைகளில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் இருக்கும் மதுக்கடைகளை மட்டும் மூடுமாறு உத்தரவில் திருத்தம் செய்ய வேண்டும். மேலும், நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கான கால அவகாசத்தை அக்கடைகளின் உரிமம் முடிவடையும் காலமான நவம்பர் 28–ந் தேதிவரை நீட்டிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்