பகத்சிங்கை தூக்கிலிட்டதற்கு பிரிட்டிஷ் அரசி மன்னிப்பு கேட்க பாகிஸ்தானில் கோரிக்கை

பகத் சிங், சுகதேவ் மற்றும் ராஜ்குரு ஆகியோரை ‘நியாயமற்ற வகையில்’ தூக்கிலிட்டதற்கு பிரிட்டிஷ் அரசி அவர்களது ஷட்மான் சவுக்கிற்கு நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.

Update: 2017-03-24 09:43 GMT
லாகூர்

பகத் சிங், சுகதேவ் மற்றும் ராஜ்குரு ஆகியோரை ‘நியாயமற்ற வகையில்’ 

தூக்கிலிட்டதற்கு பிரிட்டிஷ் அரசி அவர்களது ஷட்மான் சவுக்கிற்கு நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 

தியாகிகளின் 86 ஆவது நினைவு தினம் நேற்று பாகிஸ்தானில் லாகூர் நகரில்  அனுசரிக்கப்பட்டது. பகத்சிங் நினைவு அறக்கட்டளை நடத்திய அஞ்சலி கூட்டத்தில் பேசிய அதன் தலைவர் அப்துல்லா மாலிக், “ தியாகிகளின் துணிவையும், தியாகத்தையும் நாம் மறக்கக்கூடாது; ஒவ்வொரு ஏகாதிபத்திய எதிர்ப்பிலும் பகத் சிங்கின் எதிரொலி இருக்கும்” என்றார். அவர் மேலும் பஞ்சாப் அரசு தியாகிகளை கவுரவிக்கவில்லை; 

அவர்களது நினைவிடமுள்ள ஷட்மான் சவுக்கிற்கு தியாகி பகத்சிங் சவுக் என்று 
பெயரிட வேண்டுமென்று கூறினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்
பிரிட்டிஷ் அரசி ஷட்மான் சவுக்கிற்கு நேரில் வந்து பொதுவெளியில் நியாயமற்ற  முறையில் தூக்கிலிட்டதற்கு மன்னிப்பு கோர வேண்டும் என்று கோரியது. 

இக்கூட்டதிற்கு மதத் தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருந்ததால் பாதுகாப்பு 
வழங்கப்பட்டிருந்தது.

மற்றொரு கூட்டத்தில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான இக்பால்
சாவ்லா பேசுகையில், “ முகம்மது அலி ஜின்னா பகத்சிங்கின் போராட்டத்தை
ஆதரித்ததோடு அதனை சட்டபூர்வமானது என்று அறிவித்தார்” என்று
சுட்டிக்காட்டினார். கவிஞரான மவுலானா ஜாபர் அலி கான் தனது கவிதை 
ஒன்றில் பகத் சிங்கை ‘தியாகி’ என்றழைத்தார். இவையெல்லாம் பகத் சிங்கின் மீதும், சீக்கிய சமுதாயத்தின் மீதும் முஸ்லிம்கள் காட்டும் அன்பைக் காட்டுகிறது என்கிறார் இக்பால் சாவ்லா.

மேலும் செய்திகள்