சசிதரூர் கருத்துக்கு பா.ஜனதா கண்டனம்

பா.ஜனதா மீண்டும் வென்றால் ‘இந்து பாகிஸ்தான்’ உருவாகி விடும் என்று கூறிய சசிதரூரின் கருத்துக்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2018-07-12 22:44 GMT

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசிதரூர், நேற்று முன்தினம் அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது அவர், ‘2019–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெற்றால், காந்தி, நேரு, படேல் போன்ற தலைவர்கள் கண்ட கனவை கலைத்து ‘இந்து பாகிஸ்தானை’ உருவாக்கி விடுவார்கள்’ எனக்கூறினார்.

அனைவரையும் ஏற்றுக்கொள்ளாத, சகிப்புத்தன்மை அற்ற மத்திய அரசு, புதிய அரசியல் சட்டத்தை உருவாக்குவதாகவும், அதன் மூலம் நாட்டுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், இந்து அரசை உருவாக்குவதும், சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு உள்ள சலுகைகளை பறிப்பதும்தான் பா.ஜனதாவினரின் சிந்தனையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

சசிதரூரின் இந்த கருத்து சர்ச்சையை உருவாக்கி உள்ளது. இது தொடர்பாக அவருக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது குறித்து கட்சியின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘இந்தியாவையும், இந்துக்களையும் அவமதிக்கும் வாய்ப்பு ஒன்றையும், வெட்கமில்லாத காங்கிரஸ் கட்சி விட்டுவிடாது. இந்து பிராந்தியத்தில் இருந்து இந்து பாகிஸ்தான் வரை பாகிஸ்தானை சாந்தப்படுத்தும் காங்கிரசின் கொள்கைகள் இணையற்றது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

கட்சியின் கர்நாடக எம்.பி.யான சோபா கரண்ட்லேயும் இதே கருத்தை கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்