துணைவேந்தர் நியமன வழக்கு 13-ந் தேதிக்கு ஒத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு நடவடிக்கை

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தை ரத்து செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை 13-ந் தேதிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.

Update: 2018-08-06 22:00 GMT
புதுடெல்லி,

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த பி.பி.செல்லத்துரைக்கு போதிய அனுபவம் கிடையாது எனவும், அவரது நியமனம் பல்கலைக்கழக விதிகளுக்கு புறம்பானது எனவும் கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

அவரது நியமனத்தை ரத்து செய்யக்கோரி மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்ட செயலாளர் லயோனல் அந்தோணிராஜ் மற்றும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த அந்த மனுக்களை விசாரித்த ஐகோர்ட்டு, பி.பி.செல்லத்துரையின் நியமனத்தை ரத்து செய்து கடந்த ஜூன் 14-ந் தேதியன்று உத்தரவிட்டது.

ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி பி.பி.செல்லத்துரை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த ஜூன் 20-ந் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டனர். மேலும் இந்த விவகாரத்தில் பதில் மனுதாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

பின்னர் கடந்த 23-ந் தேதியன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்டு 6-ந் தேதிக்கு (நேற்று) ஒத்திவைத்த நீதிபதிகள் அதுவரை புதிய துணைவேந்தர் நியமனம் செய்யக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மதிய உணவு இடைவேளைக்கு மிகவும் குறுகிய நேரமே இருந்ததாலும், தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க குறைந்தது 2 மணி நேரமாவது தேவைப்படும் என்றும் மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி கோரிக்கை வைத்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை 13-ந் தேதி பிற்பகல் 2.00 மணிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்