2016-ல் இருந்து விவசாயிகள் தற்கொலை தொடர்பான தரவுகள் இல்லை - விவசாயத்துறை அமைச்சர்

2016-ல் இருந்து விவசாயிகள் தற்கொலை தொடர்பான தரவுகள் இல்லை என விவசாயத்துறை அமைச்சர் மக்களவையில் தெரிவித்துள்ளார்.

Update: 2018-12-20 12:03 GMT
புதுடெல்லி,

 2016-ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் எத்தனை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர், அவர்களுடைய குடும்பத்தினரின் மறுவாழ்விற்கு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. தினேஷ் திரிவேதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன், கடந்த மூன்று ஆண்டுகளில் விவசாயிகள் தற்கொலை தொடர்பான தரவுகள் இல்லையென தெரிவித்துள்ளார். விவசாய கடன் தள்ளுபடி மற்றும் விவசாய விளைப்பொருட்களுக்கு ஆதாரவிலை போன்றவற்றை அடிப்படையாக கொண்டு மூன்று மாநிலங்களில் பா.ஜனதாவை,  காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்து நீக்கிய நிலையில் இத்தகவலை மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.

"உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் என்சிஆர்பி தற்கொலைகள் பற்றிய தகவலை தொகுத்து வெளியிடுகிறது. அதனுடைய இணையதளத்தில் 2015-ம் ஆண்டு வரையிலான தற்கொலைகள் பற்றிய அறிக்கைகள் உள்ளது. அதற்கு பின்னர் நடந்த சம்பவங்கள் தொடர்பான அறிக்கைகள் இனிதான் வெளியிடப்படும் “  என விவசாயத்துறை அமைச்சர் வழங்கியுள்ள எழுத்துப்பூர்வமான தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விவசாயிகள் இந்தியா முழுவதும் விவசாய கடன் தள்ளுபடி மற்றும் விளைப்பொருட்களுக்கு குறைந்தப்பட்ச ஆதாரவிலை போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே தேர்தல்களில் தோல்வியை தழுவிய பா.ஜனதா, விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக நடவடிக்கை எடுக்க முற்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் செய்திகள்