ரூ.1.76 லட்சம் கோடி உபரி நிதி - மத்திய அரசுக்கு வழங்க இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல்

ரூ.1.76 லட்சம் கோடி உபரி நிதியை மத்திய அரசுக்கு வழங்க இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

Update: 2019-08-26 18:16 GMT
மும்பை,

உலக அளவில் பல நாடுகளின் ரிசர்வ் வங்கிகள் 14 சதவிகிதம் மட்டும் உபரி நிதியை இருப்பாக தங்கள் வசம் வைத்துக்கொண்டு மீதம் உள்ள தொகையை அரசுகளுக்கு கொடுத்துவிடுகின்றன.

இந்திய ரிசர்வ் வங்கியைப் பொறுத்தவரை 28 சதவிகிதம் உபரி நிதியை தன்வசம் வைத்துக்கொண்டு, பாக்கி உள்ளதை மத்திய அரசுக்கு கொடுத்துவந்தது. உலக நாடுகளின் செயல்களையும், நிதிப் பற்றாக்குறையையும்  சுட்டிக்காட்டி, கூடுதல் உபரி நிதியை வழங்குமாறு ரிசர்வ் வங்கியிடம் மத்திய நிதியமைச்சகம் கோரியது. ஆனால், அந்த நிதியைத் தர ரிசர்வ் வங்கி மறுத்த நிலையில், அப்போதைய ஆளுநரான உர்ஜித் படேலுக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவியது. இந்த மோதல் போக்கை தொடர்ந்து உடல் நிலையைக் காரணம் காட்டி உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பின்னர் ரிசர்வ் வங்கி கவர்னர்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே தொடர்ந்து வரும் இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்காக முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் பிமல் ஜலான் தலைமையில் கடந்த டிசம்பர் மாதம் ஒரு குழு அமைக்கப்பட்டது. இதில், முன்னாள் ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ராகேஷ் மோகன், நிதித்துறைச் செயலர் ராஜீவ் குமார் உள்ளிட்ட ஆறு பேர் உறுப்பினர்களாக இடம்பெற்றனர். பல்வேறு சாராம்சங்களை ஆராய்ந்த இந்தக் குழு சமீபத்தில் ரிசர்வ் வங்கியிடம் தனது அறிக்கையைத் தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையில், ரிசர்வ் வங்கி தங்களிடம் இருக்கும் உபரி நிதியை சிறு தவணைகளாக மத்திய அரசுக்கு வழங்கலாம். இதை 3 முதல் 5 ஆண்டுகளுக்கு கொடுக்கலாம்'' என்று பரிந்துரை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் மத்தியக் குழுக் கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது. இதில் பிமல் ஜலான் அறிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மத்திய அரசுக்கு ரூ.1,76,051 கோடியை வழங்க மத்திய வங்கியின் வாரியம் முடிவு செய்துள்ளது. இதில் ரூ.1,23,414 கோடி 2018-19-ம் ஆண்டுக்கான உபரி இருப்புத்தொகை ஆகும்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்