புதிய மோட்டார் வாகன சட்டத்தில் மாட்டு வண்டிக்கு அபராதம்

புதிய மோட்டார் வாகன சட்டத்தில் மாட்டு வண்டிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2019-09-16 21:00 GMT
டேராடூன்,

இந்தியாவில் கடந்த 1-ந்தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டம் முறையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. விதிமுறைகளை மீறுவோருக்கு கடுமையான அபராதங்களும் விதிக்கப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் சாலை விதிகளை மீறியதாக ஒடிசாவை சேர்ந்த லாரி டிரைவருக்கு ரூ.80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ராஜஸ்தானை சேர்ந்த லாரி உரிமையாளருக்கு ரூ.1 லட்சத்து 41 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்தநிலையில் உத்தரகாண்டில் விவசாயி ஒருவரின் மாட்டு வண்டிக்கு அபராதம் விதித்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

சார்பா கிராமத்தை சேர்ந்தவர் ரியாஸ் ஹாசன். விவசாயியான இவர் தனக்கு சொந்தமான மாட்டு வண்டியை தனது வயலுக்கு அருகில் நிறுத்தி வைத்திருந்தார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசார் மாட்டுவண்டியை பார்த்ததும் தங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கு நிறுத்தப்பட்டிருந்த மாட்டு வண்டி குறித்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து மாட்டு வண்டியை அவரது வீட்டுக்கு கொண்டுச்சென்ற போலீசார் ரியாசிடம் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும் எனக் கூறி ரசீதை கொடுத்துவிட்டு சென்றனர்.

புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் மாட்டுவண்டி வராதபோது அதற்கு ஏன் அபராதம்? என குழம்பிய ரியாஸ் காவல் நிலையத்துக்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி விசாரித்தார்.

அப்போது போலீசார் சட்டவிரோதமாக மணல் கடத்தும் மாட்டு வண்டிகளில் இதுவும் ஒன்று என அவர்கள் நினைத்ததால் தவறு நடந்துவிட்டதாக கூறி அபராதத்தை ரத்து செய்தனர்.

மேலும் செய்திகள்