மகாராஷ்டிராவில் கனமழைக்கு பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு; 10,500 பேர் மீட்பு

மகாராஷ்டிராவில் கனமழைக்கு பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. 10,500 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.

Update: 2019-09-26 07:51 GMT
புனே,

மகாராஷ்டிராவில் பருவமழை பெய்ய தொடங்கியதில் இருந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போய் உள்ளது.  புனே நகரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.  இதனால் பல்வேறு நகரங்களில் ரெயில் மற்றும் பேருந்து போக்குவரத்து பாதிப்படைந்து உள்ளது.  பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன.

மகாராஷ்டிராவின் புனே நகரில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியாகி உள்ளனர்.  புனே நகரின் சின்ஹாகட் சாலையில் வெள்ளத்தில் சிக்கிய கார் ஒன்றில் இருந்து ஒருவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

இதேபோன்று புனே நகரின் சஹாகர் நகர் அருகே மற்றொரு உடலை தீயணைப்பு படை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.  இதனால் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.  மற்றொரு சம்பவத்தில் சிவப்பூர் கிராமத்தில் தர்கா ஒன்றில் தூங்கி கொண்டிருந்த 5 பேர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பலியாகி உள்ளனர்.  இதனால் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வடைந்து உள்ளது.

கனமழையை அடுத்து புனே நகர், புராந்தர், பராமதி, போர் மற்றும் ஹாவேலி பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு புனே மாவட்ட ஆட்சியர் நேவல் கிஷோர் ராம் விடுமுறை அறிவித்துள்ளார்.

முதல் மந்திரி பட்னாவிஸ், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்.  தேசிய பேரிடர் பொறுப்பு படையினர் குவிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.  இதுவரை 10 ஆயிரத்து 500 பேர் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்