சவுதி அரேபியாவில் பேருந்து விபத்தில் 35 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

சவுதி அரேபியாவில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 35 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2019-10-17 08:24 GMT
புதுடெல்லி,

சவுதி அரேபியாவில்  மெதினாவில் இருந்து தனியார் பேருந்து ஒன்று அரபு மற்றும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த 39-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பயணிகளுடன் இன்று புறப்பட்டது. இந்தப் பேருந்து மதினா அருகே  170 கி.மீ. தொலைவில் உள்ள அல் அகால் எனும் கிராமம் அருகே, ஹிஜ்ரா சாலையில் வந்தபோது, எதிரே வந்த கனரக வாகனமும், பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

மோதிய வேகத்தில் பேருந்து தீப்பிடித்ததால், ஏராளமான பயணிகள் பேருந்துக்குள்ளே சிக்கிக்கொண்டு வெளியே வரமுடியாமல் உயிரிழந்தனர்.  சிலர் மட்டும் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்கள். காயமடைந்த 4 பயணிகள் தினாவில் உள்ள அல்-ஹம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என சவுதி ஊடக செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்

விபத்தில் படுகாயம் அடைந்த 4 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், 

சவூதி அரேபியாவின்  மெக்கா அருகே நடந்த பேருந்து விபத்து செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.  உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்