இருசக்கர வாகனத்தில் பெண்ணை துரத்திச் சென்று இளைஞர்கள் பாலியல் தொந்தரவு - பெங்களூருவில் அதிர்ச்சி

சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தூரத்திற்கு இளம்பெண்ணை 3 இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்றனர்.;

Update:2025-12-28 09:43 IST

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சில்க் போர்டு சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளம்பெண்ணை, மற்றொரு இருசக்கர வாகனத்தில் 3 இளைஞர்கள் துரத்திச் சென்று பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரான நிலையில், இந்த சம்பவம் பெங்களூரு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரவு 10 மணியளவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணை இளைஞர்கள் துரத்திச் செல்லும் காட்சியானது பின்னால் வந்த காரில் பொருத்தப்பட்டிருந்த டேஷ் போர்டு கேமராவில் பதிவாகி உள்ளது. அதில், ஒரே இருசக்கர வாகனத்தில் விதிகளை மீறி 3 பேர் பயணம் செய்கின்றனர். ஒருவரும் ஹெல்மெட் அணியவில்லை. சம்பந்தப்பட்ட காரின் உரிமையாளர் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அந்த பதிவில், சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தூரத்திற்கு இளம்பெண்ணை 3 இளைஞர்களும் துரத்திச் சென்றனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆதாரத்திற்காக வீடியோவை பதிவு செய்துவிட்டு, பின்னர் அந்த இளைஞர்களை மடக்கிப் பிடிக்க முயன்றதாகவும், ஆனால் அவர்கள் தப்பிச் சென்றுவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த வீடியோ வைரலாக பரவிய நிலையில், இது பெங்களூரு காவல்துறையின் கவனத்திற்குச் சென்றது. உடனடியாக பெங்களூரு போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி, சம்பந்தப்பட்ட இளைஞர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தினர். அவர்கள் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் யாருடையது என்ற விவரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அந்த இளைஞர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பெங்களூரு போலீசார் உறுதியளித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்