சிவசேனாவுக்கு முதல் மந்திரி பதவி வழங்குவதாக கட்சித்தலைமை கூறியதா? தேவேந்திர பட்னாவிஸ் விளக்கம்

மராட்டியத்தில் பாஜக- சிவசேனா இடையே அதிகாரப்பகிர்வில் உடன்பாடு எட்டப்படாததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது.

Update: 2019-10-29 08:16 GMT
மும்பை,

288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய மாநில சட்டசபைக்கு கடந்த 21-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணிக்கு 161 இடங்கள் கிடைத்தன. இரு கட்சிகளும் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருகின்றன. 

ஆனால் முதல்-மந்திரி பதவி யாருக்கு என்பதிலும், மந்திரி பதவிகளை பகிர்ந்துகொள்வதிலும் பிரச்சினை இருந்து வருவதால் புதிய அரசு அமைவதில் இழுபறி நிலை ஏற்பட்டு உள்ளது. 105 இடங்களில் வெற்றி பெற்றுள்ள பாரதீய ஜனதா முதல்-மந்திரி பதவி தன்னிடம் இருக்கவேண்டும் என்பதிலும், தற்போதைய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை மீண்டும் அந்த பதவியில் அமரவைக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறது.

ஆனால் 56 இடங்களை கைப்பற்றி இருக்கும் சிவசேனா, அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரேயை முதல்-மந்திரியாக்க விரும்புகிறது. அத்துடன் ஆட்சியில் சமபங்கும் கேட்கிறது. ஆட்சியில் சமபங்கு பற்றி பாரதீய ஜனதாவுடன் ஏற்கனவே பேசி முடிவு செய்யப்பட்டு இருப்பதாக உத்தவ் தாக்கரே கூறி உள்ளார். 

இதனால், புதிய ஆட்சி அமைதில் மராட்டியத்தில் தாமதம் நீடிக்கிறது.  இந்த நிலையில், முதல் மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வதாக  நாங்கள் உறுதியளிக்கவில்லை என்று தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். முதல் மந்திரி பதவி தொடர்பாக எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை என்று கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தன்னிடம் கூறியதாக தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

தற்போதைய மராட்டிய சட்டசபையின் பதவி காலம் வருகிற நவம்பர் 9-ந் தேதியுடன் முடிவடைய இருப்பதால் அதற்குள் புதிய அரசு பதவி ஏற்க வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது. 

மேலும் செய்திகள்