குற்றத்தின் தீவிரத்தன்மை என்று கூறி ப.சிதம்பரத்தை தொடர்ந்து சிறையில் வைப்பதா? - சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் வாதம்

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், குற்றத்தின் தீவிரத்தன்மை என்று சொல்லி ப.சிதம்பரத்தை தொடர்ந்து சிறையில் வைப்பதா? என்று சுப்ரீம் கோர்ட்டில் அவரது வக்கீல் வாதாடினார்.

Update: 2019-11-27 23:00 GMT
புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து நிதி திரட்ட அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்டு 21-ந் தேதி சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சி.பி.ஐ. தொடர்ந்த இந்த வழக்கில் அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு சில நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது.

இதற்கிடையே, இதே வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்தனர்.

அமலாக்கப்பிரிவு வழக்கில் ப.சிதம்பரம் தரப்பில் ஜாமீன் கோரி டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ் குமார் கெயித், அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்து தீர்ப்பு வழங்கினார்.

இதைத்தொடர்ந்து ப.சிதம்பரம் தரப்பில் ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த 20-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, பதில் மனு தாக்கல் செய்யுமாறு அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 26-ந் தேதிக்கு (நேற்று) ஒத்திவைத்தனர்.

அதன்படி நேற்று இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல் வாதாடுகையில் கூறியதாவது:-

அமலாக்கப்பிரிவு ப.சிதம்பரத்திடம் இதுவரை விசாரணை எதுவும் நடத்தவில்லை. சாட்சியங்களை முன்வைத்தும் அவரிடம் நேரடியாக விசாரிக்கவில்லை. கிட்டத்தட்ட நூறு நாட்கள் ஆகின்றன. அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல மாட்டார். ஆதாரங்களை கலைக்க மாட்டார். சாட்சியங்களை மிரட்ட மாட்டார் என்பதை ஐகோர்ட்டு ஏற்றுக்கொண்டு இருக்கிறது. ஆனாலும் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு உள்ளது.

குற்றத்தின் தீவிரத்தன்மையை கருதி ஜாமீன் மறுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த வழக்கில் முன்வைக்கப்படும் குற்றத்தை நிரூபிக்கும் வகையில் ஒரு மின்னஞ்சல், ஒரு குறுஞ்செய்தி அல்லது ஒரே ஒரு ஆவணம் கூட இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை. இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் ப.சிதம்பரம் மட்டும் சிறையில் வைக்கப்பட்டு இருக்கிறார்.

கார்த்தி சிதம்பரத்தின் தந்தை என்ற ஒரே காரணத்துக்காக அவர் குறிவைக்கப்பட்டு உள்ளார்.

இந்த வழக்கில் 2018-ம் ஆண்டில் இருந்து அமலாக்கத்துறையிடம் சாட்சியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த வழக்கை கோர்ட்டில் தாக்கல் செய்யும் வரை ப.சிதம்பரம் விசாரிக்கப்படவில்லை. இது அவருடைய சிறைவாசத்தை முடிந்தவரை இழுத்தடிக்க செய்யும் முயற்சியாகும். அவரை வெறுமனே சிறையில் வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் செயல்படுகிறார்கள்.

இவர் ஏதோ பில்லா, ரங்கா என்பது போல், இவருக்கு ஜாமீன் வழங்குவது சமூகத்துக்கு தவறான சமிக்ஞையை தரும் என்று ஐகோர்ட்டு கூறி உள்ளது.

(டெல்லியில் கடந்த 1978-ம் ஆண்டு கடற்படை அதிகாரி ஒருவரின் குழந்தைகளான கீதா என்ற சிறுமியும், சஞ்சய் சோப்ரா என்ற சிறுவனும் பணத்துக்காக பில்லா, ரங்கா ஆகியோரால் கடத்தி கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் பில்லாவுக்கும், ரங்காவுக்கும் பின்னர் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டது)

ஊழல் நடந்துள்ளது என்பது நிரூபிக்கப்படவில்லை. அவர் வெளிநாடு தப்பிச் செல்லமாட்டார் என்று ஐகோர்ட்டே கூறும் போது ஏன் அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது? இந்த வழக்கில் குற்றம் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. அதன் பிறகுதான் குற்றத்தின் தீவிரத்தன்மை பற்றி பேசவேண்டும். இவ்வாறு கபில் சிபல் வாதாடினார்.

இதைத்தொடர்ந்து ப.சிதம்பரம் தரப்பில் மற்றொரு மூத்த வக்கீலான அபிஷேக் சிங்வி வாதாடுகையில் கூறியதாவது:-

அமலாக்கப்பிரிவு உள்நோக்கத்துடன் இந்த வழக்கின் தீவிரத்தன்மை பற்றிய வாதங்களை பெரிதுபடுத்துகிறது. குற்றத்தின் தீவிரத்தன்மை என்ற ஒரு வார்த்தையை மட்டுமே வைத்து ஒருவருக்கு ஜாமீன் மறுக்க முகாந்திரம் ஏதுமில்லை. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், பயங்கரவாதிகள் மற்றும் தொடர் குற்றங்களை இழைப்பவர்கள் மீதான வழக்கு மட்டுமே அசாதாரணத்தன்மை கொண்ட வழக்கு என்று வகைப்படுத்தப்படும். ஆனால் இந்த வழக்கு முற்றிலும் வேறுபட்டது.

குற்றத்தின் தீவிரத்தன்மை என்ற ஒரு சொல்லுக்காகவே ஒருவர் விசாரணை முடிவடையும் வரை சிறையிலேயே வைத்திருக்க வேண்டும் என்பது என்ன நியாயம்? மிகவும் அசாதாரணமான சூழ்நிலையில் மட்டுமே ஒருவருக்கு ஜாமீன் மறுக்கப்படலாம்.

இந்த வழக்கில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் எதுவும் ப.சிதம்பரம் தொடர்புடையது அல்ல. ஆனால் மற்றவர்களுடன் தொடர்பு உடையது. எனவே, இவருக்கு ஐகோர்ட்டு ஜாமீன் மறுத்தது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. இவ்வாறு அபிஷேக் மனுசிங்வி வாதாடினார்.

ப.சிதம்பரம் தரப்பிலான வாதங்கள் நேற்றுடன் முடிவடைந்தன. அமலாக்கப்பிரிவு தரப்பில் இன்று (வியாழக்கிழமை) எதிர்வாதங்கள் முன்வைக்கப்படும்.

இதற்கிடையே அமலாக்கப்பிரிவு வழக்கில் ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் முடிவடைந்ததை தொடர்ந்து அவர் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு தனிக்கோர்ட்டில் நீதிபதி அஜய் குமார் குஹர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

விசாரணை தொடங்கியதும் நீதிபதி அஜய் குமார் குஹர், சுப்ரீம் கோர்ட்டில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை அடுத்து எப்போது நடைபெறும்? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் தயான் கிருஷ்ணன், தங்கள் தரப்பு வாதம் முடிவடைந்துவிட்டதாகவும், அமலாக்கப்பிரிவு தரப்பிலான வாதம் நாளை (அதாவது இன்று) தொடங்கும் என்றும் கூறினார்.

இதைத்தொடர்ந்து அமலாக்கப்பிரிவு தரப்பில், ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை வருகிற டிசம்பர் 11-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் செய்திகள்