இடதுசாரிகள் சார்பில் நடத்தப்பட்ட நாடு தழுவிய முழு அடைப்புக்கு போதிய ஆதரவு இல்லை

இடதுசாரிகள் சார்பில் நடத்தப்பட்ட நாடு தழுவிய முழு அடைப்பால் எந்தவித பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-01-29 21:52 GMT
புதுடெல்லி,

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற திட்டங்களுக்கு எதிராக நேற்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு இடதுசாரி கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன. ஆனால் இந்த போராட்டத்துக்கு பெரும்பாலும் ஆதரவு காணப்படவில்லை. போராட்டத்தையொட்டி பீகாரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் பல இடங்களில் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் அரசு மற்றும் தனியார் வாகன போக்குவரத்து முடங்கியது. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எனினும் கடைகள் அனைத்தும் பெரும்பாலும் திறக்கப்பட்டு இருந்தன. அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

உத்தரபிரதேசத்தில் சில இடங்களில் முழு அடைப்புக்கு லேசான ஆதரவு காணப்பட்டது. எனினும் வாகன போக்குவரத்து வழக்கம் போல இருந்தது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் திறந்திருந்தன. சுல்தான்பூர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தி சட்டம்-ஒழுங்கை சீரமைத்தனர்.

மராட்டியத்திலும் இந்த முழு அடைப்பால் எந்தவித பாதிப்பும் இல்லை. மும்பையில் கஞ்சுர்மார்க் புறநகர் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் அமர்ந்து போராடிய சுமார் 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்