மேற்குவங்காள எம்.எல்.ஏ. மரணம்: ‘பா.ஜ.க. கூறுவது போல அரசியல் கொலை இல்லை’ - ஜனாதிபதிக்கு, மம்தாபானர்ஜி கடிதம்

மேற்குவங்காள எம்.எல்.ஏ. மரணம் பா.ஜ.க. கூறுவது போல அரசியல் கொலை இல்லை என்று ஜனாதிபதிக்கு, மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தாபானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2020-07-15 19:05 GMT
கொல்கத்தா, 

மேற்குவங்காளத்தின் ஹெம்தாபாத் சட்டசபை தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாக இருந்தவர் தேவேந்திரநாத் ராய் (வயது 59). இவர் கடந்த சிலதினங்களுக்குமுன்பு மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். எம்.எல்.ஏ. மரணத்திற்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தான் காரணம் என்று பா.ஜ.க. குற்றம்சாட்டியது. 

மேலும் எம்.எல்.ஏ. மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுமாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை நேற்று முன்தினம் அக்கட்சி நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

இந்தநிலையில் முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தாபானர்ஜி ஜனாதிபதிக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், ‘பிரேதபரிசோதனை அறிக்கை, முதல் கட்ட விசாரணையில் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் தான் எம்.எல்.ஏ. தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. அவரது சட்டை பையில் இருந்த கடிதத்தில் இதனை குறிப்பிட்டுள்ள அவர், தனது சாவுக்கு 2 பேர் தான் காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே பா.ஜ.க.வினர் கூறுவதுபோல இது அரசியல் கொலை இல்லை’ என்று கூறியுள்ளார்.

இந்த கடிதத்தை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தெரிக் ஓ பிரைன் ஜனாதிபதியிடம் நேரில் அளித்தார்.

மேலும் செய்திகள்