ஊரடங்கு ஏழைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்: ராகுல் காந்தி காட்டம்

கொரோனாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு எந்த பலனையும் தரவில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-09 08:32 GMT
புதுடெல்லி,

நாட்டின் பொருளாதார சூழல் குறித்தும் கொரோனா பெருந்தொற்றை முறையாக மோடி அரசு கையாளவில்லை எனவும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம் சாட்டி வருகிறார். ராகுல் காந்தி தனது சமூக வலைத்தள பக்கத்தில் தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்த நிலையில், ராகுல் காந்தி இன்று வெளியிட்ட பதிவில், “ திட்டமிடப்படாத ஊரடங்கு இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பை உடைத்து விட்டதாக தெரிவித்துள்ளார். 

ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:  சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்களில் தினக்கூலிகளாக பணியாற்றிய ஏழைகள், தங்கள் தினசரி வருமானத்தையே நம்பியிருந்தனர். எந்த முன் அறிவிப்பும் இன்றி நீங்கள்(பிரதமர்) ஊரடங்கை அமல்படுத்தி அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளீர்கள்.  

கொரோனாவுக்கு எதிரான போர் 21 நாட்கள் இருக்கும் என பிரதமர் அறிவித்தார். ஆனால், 21 நாட்களில் அமைப்புசாரா துறைகளின் முதுகெலும்பு நொறுங்கிவிட்டது. அவர்கள் காப்பாற்றப்பட வேண்டும். பணம் இல்லாமல் அவர்களால் வாழ முடியாது. ஆனால், அரசு எதையுமே செய்யவில்லை. இதற்கு பதிலாக 15-20 பணக்காரர்களுக்கு லட்சகணக்கான கோடி மதிப்பிலான வரிகளை தள்ளுபடி செய்துள்ளது.  

ஊரடங்கு என்பது கொரோனாவுக்கு எதிரான தாக்குதலாக இல்லை. மாறாக  இந்திய ஏழைகளின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாக உள்ளது” என்றார். 

மேலும் செய்திகள்