2ஜி முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த ஆவணங்களில் குறைபாடுகள் - டெல்லி ஐகோர்ட்டில் எதிர்மனுதாரர்கள் வாதம்

2ஜி முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள ஆவணங்களில் குறைபாடுகள் உள்ளதாக எதிர்மனுதாரர்கள் தரப்பு வக்கீல்கள் வாதிட்டனர்.

Update: 2020-10-07 22:00 GMT
புதுடெல்லி,

2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்குகளில் இருந்து முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 14 பேரும் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீதான தொடர் விசாரணை டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி பிரிஜேஷ் சேத்தி முன்பு நேற்று 3-வது நாளாக நடைபெற்றது. அப்போது எதிர்மனுதாரர் ஆசீப் பால்வா தரப்பு வக்கீல் விஜய் அகர்வால் வாதிடுகையில், ‘2ஜி மேல்முறையீடு வழக்கு தொடர்பான ஆவணங்களை முழுமையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று தான் கேட்டோம். கோர்ட்டில் காட்டப்பட்ட ஆவணங்கள் முழுமையாக இல்லை. இ.மெயிலில் அனுப்பியுள்ள ஆவணத்தை ஏற்க முடியாது. 2ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளதாக குறிப்பிட்டுள்ளதே தவிர, அதற்கான உத்தரவு ஆவணம் எங்களுக்கு வழங்கப்படவில்லை’ என்று கூறினார்.

அப்போது மூத்த வக்கீல் அரிகரன், ‘சி.பி.ஐ. தாக்கல் செய்த ஆவணங்களில் குறைபாடுகள் உள்ளன. 2ஜி வழக்கை விரைந்து விசாரிக்க சிறப்பு கோர்ட்டை சுப்ரீம் கோர்ட்டு ஏற்படுத்தியது. மேல்முறையீட்டு மனுக்களை அரசு வக்கீல் சஞ்சீவ் பண்டாரி தாக்கல் செய்திருக்கக் கூடாது’ என வாதிட்டார்.

எதிர்மனுதாரர் சித்தார்த் பெஹுரா தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சித்தார்த் லுத்ரா, அரசு தரப்பு வக்கீல் சஞ்சீவ் பண்டாரி 2ஜி வழக்குகளுக்காக நியமிக்கப்படவில்லை என வாதாடினார். கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்ஜெய் ஜெயின், ‘2ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படியே சி.பி.ஐ. மனு தாக்கல் செய்தது. அரசு தரப்பு வக்கீல் சஞ்சீவ் பண்டாரி சி.பி.ஐ. உள்ளிட்ட அனைத்து வழக்குகளிலும் ஆஜராக முடியும்’ என்று கூறினார்.

வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதி பிரிஜேஷ் சேத்தி, வழக்கு விசாரணையை இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு தள்ளிவைத்தார்.

மேலும் செய்திகள்