இந்தோனேசியா விமான விபத்து: பிரதமர் மோடி இரங்கல்

இந்தோனேசியாவில் விமான விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2021-01-10 09:59 GMT
புதுடெல்லி,

இந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து போண்டியானாக் பகுதிக்கு புறப்பட்ட ஸ்ரீவிஜய விமான நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737-500 ரக விமானம் ஒன்று நேற்று புறப்பட்டு சென்றது.

ஆனால், கிளம்பிய 4 நிமிடங்களிலேயே 11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென அந்த விமானம் ரேடாரிலிருந்து மறைந்துள்ளது.

விமானத்தில் 46 பெரியவர்கள், ஏழு குழந்தைகள், மூன்று கைக்குழந்தைகள் மற்றும் ஆறு விமான ஊழியர்கள் என மொத்தம் 62 பேர் இருந்தனர்.  அவர்கள் அனைவரும் இந்தோனேசியா நாட்டை சேர்ந்தவர்கள் என விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்தது.

இதனையடுத்து, விமானம் தொடர்பை இழந்த கடல் பகுதியில் இந்தோனேசியா அவசர மற்றும் மீட்பு சேவையினர் கப்பலில் தேடுதல் பணியை தொடங்கினர். ஜகார்த்தா விரிகுடாவில் விமானத்தின் பாகங்களை மீட்பு குழுவினர் கண்டுபிடித்தனர். மீட்புக்குழுவினர் விமான பாகங்களை கண்டுபிடித்த வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டது.  மேலும், விமானத்தில் பயணித்தவர்களை ஜகார்த்தா விரிகுடாவில் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக மீட்பு அதிகாரிகள்  தெரிவித்தனர்.

மாயமான விமானம் இந்தோனேசிய விமானம் ஜாவா கடலில் விழுந்து நொறுங்கியது என்று அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பதிவில், 

இந்தோனேசியாவில் நடந்த துரதிர்ஷ்டவசமான விமான விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இந்த நேரத்தில் இந்தியா இந்தோனேசியாவுடன் துணை நிற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்