இந்திய ராணுவத்தின் பொறுமையை யாரும் சோதிக்க வேண்டாம்: சீனாவுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை

பேச்சுவார்த்தை மூலம் எல்லை பிரச்சினையை தீர்க்க விரும்பினாலும், இந்திய ராணுவத்தின் பொறுமையை யாரும் சோதிக்க வேண்டாம் என்று சீனாவுக்கு இந்திய ராணுவ தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2021-01-16 00:46 GMT
புதுடெல்லி,

இந்திய ராணுவ தளபதி பொறுப்பை ஆங்கிலேயரிடம் இருந்து இந்தியரான கரியப்பா ஏற்ற நாள் (ஜனவரி 15-ந் தேதி), ஆண்டுதோறும் ராணுவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ராணுவ தினத்தையொட்டி, டெல்லி கரியப்பா மைதானத்தில் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெற்றது.

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், இந்திய ராணுவ தளபதி நரவனே, விமானப்படை தளபதி பதாரியா, கடற்படை தளபதி கரம்பீர் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வீர தீர செயல் புரிந்தவர்களுக்கு ராணுவ தளபதி நரவனே விருதுகள் வழங்கினார். 75 ஆளில்லா குட்டி விமானங்கள் பல்வேறு சாகசங்களை செய்து காண்பித்தன.

பின்னர், அணிவகுப்பு நிகழ்ச்சியில், ராணுவ தளபதி நரவனே பேசியதாவது:-

லடாக் எல்லையை சீனா தன்னிச்சையாக மாற்றி அமைக்க முயற்சி செய்தது. அதன் சதித்திட்டத்துக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.

சீனாவுடனான எல்லை பிரச்சினையை பேச்சுவார்த்தை மற்றும் அரசியல் முயற்சிகள் மூலம் தீர்த்துக்கொள்ள இந்திய ராணுவம் உறுதி பூண்டுள்ளது. ஆனால், இந்திய ராணுவத்தின் பொறுமையை சோதிக்கும் தவறை யாரும் செய்ய வேண்டாம்.

கல்வான் பள்ளத்தாக்கில் 20 இந்திய வீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது.  பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து பாதுகாப்பான புகலிடம் அளித்து வருகிறது. அதற்கு கடுமையான பதிலடி கொடுத்து வருகிறோம்.  இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்