ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் ஊரடங்கு காரணமாக நாளை முதல் தரிசன நேரம் மாற்றம்

ஊரடங்கு காரணமாக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நாளை முதல் 3 மணி நேரம் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2021-05-30 23:29 GMT
ஸ்ரீகாளஹஸ்தி,

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், ஆந்திர மாநிலத்திலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனை பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஆந்திராவில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஊரடங்கு காரணமாக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில், ஊரடங்கு விதிமுறைகளுக்கு உட்பட்டும், பக்தர்களின் உடல்நலத்தை கருத்தில் கொண்டும் தரிசன நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி காலை 6 மணி முதல் 9 மணி வரை, 3 மணி நேரம் மட்டுமே பக்தர்கள் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். காலை 6 மணி முதல் 9 மணி வரை ராகு- கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜைகளில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கோவிலில் நடக்கும் மற்ற அனைத்து ஆர்ஜித சேவைகளும் பக்தர்களின்றி கோவில் தேவஸ்தானம் சார்பில் மட்டுமே நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்களின் வசதிக்காக, இணைய தளம் மூலம் ராகு-கேது சர்ப தோஷ பூஜைகள் உள்பட 12 விதமான ஆர்ஜித சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர். பக்தர்கள் அனைவரும் இணையதளம் மூலம் அவர்களுக்கு வேண்டிய சேவைகளுக்கான கட்டணத்தை இணையதளம் மூலம் செலுத்தி, அவர்கள் பெயர் மற்றும் கோத்திரம் பெயர்களுடன் பூஜைகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான விபரங்கள் குறித்து 08578 -222240 தொலைபேசி மூலம் தேவஸ்தானத்தை தொடர்புகொண்டு அறிந்து கொள்ளலாம் என்று ஸ்ரீ காளஹஸ்தி கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்