பிரதமர் மோடி, மத்திய தலைமைக்கு நன்றி; ராஜினாமா செய்தபின் தீரத் சிங் ராவத் பேட்டி

பிரதமர் மோடி மற்றும் மத்திய தலைமைக்கு உத்தரகாண்ட் முதல் மந்திரி பதவியில் இருந்து ராஜினாமா செய்த ராவத் நன்றி கூறியுள்ளார்.

Update: 2021-07-02 20:29 GMT


டேராடூன்,

உத்தரகாண்டில் கடந்த 2017ல் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று, முதல் மந்திரியாக திரிவேந்திர சிங் ராவத் பதவியேற்றார். 4 ஆண்டுகளாக பதவி வகித்த அவருக்கு எதிரான உட்கட்சி பூசலால், கடந்த மார்ச்சில் பதவியை ராஜினாமா செய்தார்.

இதனை தொடர்ந்து, மக்களவை எம்.பி.,யான தீரத் சிங் ராவத், முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார்.  சட்டசபையில் எம்.எல்.ஏ.வாக இல்லாத தீரத் சிங் ராவத், வருகிற செப்டம்பருக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக வேண்டும்.

கொரோனா பரவல் காரணமாக இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தற்போது தயாராக இல்லை. எனவே தீரத் சிங் ராவத், செப்டம்பருக்குள் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்படுவதில் சிக்கல் உள்ளது.  இதேபோன்று, மாநில பா.ஜ.க.விலும் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலும் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், தீரத் சிங் ராவத் டேராடூனில் உள்ள ராஜ் பவனில் கவர்னர் பேபி ராணி மவுரியாவை இரவில் நேரில் சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்பில் அவர் தனது ராஜினாமா கடிதத்தினை வழங்கினார்.  அவரது இந்த திடீர் ராஜினாமா கட்சியினரிடையே பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி, ராஜினாமா செய்தபின்பு செய்தியாளர்களிடம் ராவத் கூறும்போது, என்னுடைய ராஜினாமா கடிதத்தினை கவர்னரிடம் அளித்துள்ளேன்.  அரசியலமைப்புக்கு நெருக்கடி அளிக்கப்பட்ட சூழலில், ராஜினாமா செய்வது சரியென நான் உணர்ந்தேன்.

இதுவரை எனக்கு அளித்த ஒவ்வொரு வாய்ப்புக்காகவும், மத்திய தலைமை மற்றும் பிரதமர் மோடிக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்