ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றபோது மோதல் - போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி

அசாமில் ஆக்கிரமிப்பு பகுதிகளை அதிகாரிகள் அகற்ற முயன்றபோது குடியிருப்புவாசிகள் மோதலில் ஈடுபட்டனர்.

Update: 2021-09-23 15:49 GMT
கவுகாத்தி,

அசாமில் அரசுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக குடியிருப்பவர்களை அகற்றும் நடவடிக்கையில் அம்மாநில அரசு ஈடுபட்டு வருகிறது. 

அந்த வகையில், அம்மாநிலத்தின் டர்ரங்க் மாவட்டம் சிபஜ்கர் பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து குடியிருப்புகள் அமைத்திருந்த 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை வெளியேற்றும் நடவடிக்கையில் போலீசார் உதவியுடன் அதிகாரிகள் ஈடுபட்டனர். 

அரசு நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகளை விட்டு வெளியேறும்படி அங்கு தங்கி இருந்த மக்களிடம் அதிகாரிகள் கூறினர். 

இதனால், ஆத்திரமடைந்த மக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்திருந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். போலீசார் மீது குடியிருப்புவாசிகள் பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தினர். இதில் சில போலீசார் படுகாயமடைந்தனர்.

நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் முதலில் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். ஆனால், ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்ந்து போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். 

நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதால் ஆக்கிரமிப்பாளர்களை கலைக்கும் நோக்கத்தோடு போலீசார் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் அசாமில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றும் நடவடிக்கையின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று அசாம் அரசு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்