குரங்கால் பெய்த பணமழை

மத்தியபிரதேசத்தில் ரூ.1 லட்சம் முடிச்சுப்போட்டு வைத்திருந்த துண்டை உணவு பொட்டலம் என நினைத்து தூக்கிச் சென்ற குரங்கு அந்த ரூபாய் நோட்டுகளை வீசியதால் பணமழை பெய்தது.

Update: 2021-10-05 01:49 GMT
போபால்,

மத்தியபிரதேச மாநிலத்தின் ஜபல்பூர் மாவட்டத்தை சேர்ந்த­ஒருவர், தனது துண்டில் ரூ.1 லட்சத்தை முடிச்சுப்போட்டு ஆட்டோரிக் ஷா இருக்கையில் வைத்து கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு இடத்தில் ஆட்டோ நின்றபோது குரங்கு ஒன்று ஆட்டோவில் வைத்திருந்த துண்டை மின்னல் வேகத்தில் பறித்து சென்றது.

பின்னர் அந்த குரங்கு அருகில் இருந்த மரத்தின் மீது வேகமாக ஏறி அமர்ந்தது. இதனால் பதறிப்போன அந்த நபர் பணத்தை தந்து­விடுமாறு குரங்கை நோக்கி இருகரங்களை நோக்கி கும்பிட்டு கெஞ்ச தொடங்கினார். இதை அந்த பகுதியில் இருந்தவர்கள் வேடிக்கை பார்த்தனர்.

துண்டில் உணவு இருப்பதாக நினைத்த குரங்கு அதை அவிழ்த்து பார்த்த போது ஏமாற்றம் அடைந்தது. அதன் பிறகு குரங்கு துண்டில் இருந்த ரூபாய் நோட்டுகளை மரத்தில் இருந்து கீழே போட்டது. அப்போது ரூபாய் நோட்டுகள் அனைத்தும் சாலையில் விழுந்து காற்றில் பறந்து பணமழை கொட்டியது. அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அந்த பணத்தை எடுத்தனர்.

ஒருசிலர் பணத்தை அவரிடம் எடுத்து கொடுத்தனர். இதில் ரூ.56 ஆயிரத்தை மட்டுமே மீட்க முடிந்தது. மீதி பணம் கிடைக்காததால் இது குறித்து அந்த நபர் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் வக்கீலிடம் இருந்து பறித்து சென்ற ரூ.2 லட்சத்தை ஒரு குரங்கு மரத்தில் இருந்து அள்ளி வீசியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்