காங்கிரஸ் ., பா.ஜனதா ஆட்சியில் நடந்த வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்க தயாரா? பசவராஜ் பொம்மைக்கு, சித்தராமையா சவால்

கர்நாடகத்தில் காங்., பா.ஜனதா ஆட்சியில் நடந்த வளர்ச்சி பணிகள் குறித்து ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா சவால் விடுத்துள்ளார்.

Update: 2021-10-23 21:24 GMT
ஹாவேரி மாவட்டம் ஹனகல் தொகுதி இடைத்தேர்தல் பிரசார கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசியதாவது:-

ஒரு வீடு கூட கட்டி...

கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பின்பு எந்த ஒரு வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. ஊழலில் ஈடுபடுவதில் மட்டுமே பா.ஜனதாவில் கவனம் செலுத்துகிறார்கள். பசவராஜ் பொம்மை தேர்தலில் போட்டியிட்டு முதல்-மந்திரி ஆகவில்லை. எடியூரப்பா பணம் செலவழித்து முதல்-மந்திரி ஆகி இருந்தார். பசவராஜ் பொம்மை ஆர்.எஸ்.எஸ். தலைவர்களால் முதல்-மந்திரி பதவிக்கு வந்துள்ளார்.

மாநிலத்தில் வறட்சி, மழை, கொரோனா போன்ற பல்வேறு பிரச்சினைகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மழையால் வீடுகளை இழந்தவர்களுக்கு ஒரு வீடு கூட கட்டிக் கொடுக்கவில்லை. ஆனால் வீடு கட்டி கொடுத்திருக்கிறோம், நிவாரணம் வழங்கி இருக்கிறோம் என்று பசவராஜ் பொம்மை கூறி வருகிறார். பசவராஜ் பொம்மை உண்மையை சொல்ல வேண்டும்.

மேடையில் விவாதிக்க தயாரா?

எனது தலைமையில் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த 5 ஆண்டுகால வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்க தயாராக இருக்கிறேன். அதுபோல், பா.ஜனதா ஆட்சியில் மாநிலத்தில் நடந்த வளர்ச்சி பணிகள் குறித்து ஒரே மேடையில் விவாதிக்க முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தயாரா?. ஒரே மேடையில் விவாதித்தால் தான் யார் ஆட்சியில் வளர்ச்சி பணிகள் நடந்தது என்று மக்களுக்கு தெரியும். ஒரே மேடையில் விவாதம் நடக்கும் போது மக்களிடம் பொய் சொல்ல முடியாது. இந்த விவாதத்திற்கு நான் தயாராக இருக்கிறேன்.

பிரதமர் நரேந்திர மோடி பொய்யை தவிர வேறு எதுவும் பேசுவதில்லை. அவரது வாயில் இருந்து உண்மை வந்ததே கிடையாது. விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்கு ஆக்குவோம், 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கொடுப்போம் என்று பிரதமர் சொல்வார். 2 கோடி பேர் வேலையை இழந்தது தான் பா.ஜனதா ஆட்சியில் நடந்த சாதனை ஆகும்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

மேலும் செய்திகள்