டெல்லி: காற்றின் தரம் தொடர்ந்து 'மிக மோசம்' நிலையில் நீடிப்பு

தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் தொடர்ந்து நீடித்து வருகிறது.

Update: 2021-11-22 04:01 GMT
புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில்,  கடந்த சில மாதங்களாக காற்றின் தரம் மிகவும் மோசமாக காணப்பட்டு வருகிறது. குறிப்பாக தீபாவளிக்குப் பின்னர் காற்றின் தரம் சுவாசிக்க முடியாத அளவிற்கு மிகவும் மோசமடைந்து உள்ளது. இதனால் பொது மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி உள்ளனர். 

காற்றின் தரத்தை உயர்த்தும் நடவடிக்கையாக அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தவிர பிற வாகனங்கள் டெல்லி மாநகர் பகுதிக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மறு உத்தரவு வரும் வரை பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், டெல்லியில் இன்றும் காற்றின் தரம் 'மிக மோசம்' என்ற நிலையில் நீடித்து வருகிறது. இது தொடர்பாக காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் டெல்லியில் இன்று காற்று தரக் குறியீடு 352 ஆக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது நேற்றைய காற்று தரக் குறியீடு 347-ஐ விட  அதிகமாகும். இதற்கிடையில் டெல்லியில் காற்று மாசைக் கட்டுபடுத்துவது தொடர்பாக, காற்று தர மேலாண்மை ஆணையத்தின் மறு ஆய்வுக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்