சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும்; கருத்துக்கணிப்பில் தகவல்

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

Update: 2022-07-27 16:39 GMT

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

சட்டசபைக்கு தேர்தல்

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு(2023) ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) உள்பட அனைத்து கட்சிகளுக்குமே தற்போது தேர்தல் ஆண்டு ஆகும். சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளை அந்த கட்சிகள் தொடங்கிவிட்டன. இதனால் பா.ஜனதாவின் பெரும் தலைவர்கள் அடிக்கடி கர்நாடகம் வந்து செல்கிறார்கள்.

பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் கர்நாடகத்தின் பக்கம் தங்களின் கவனத்தை திருப்பியுள்ளனர். அதற்கு முன்னதாக வருகிற டிசம்பர் மாதத்தில் குஜராத் மாநில சட்டசபைக்கு தேர்தல் நடக்கிறது. அத்துடன் கர்நாடக சட்டசபைக்கும் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படும் என்ற தகவலும் பரவி வருகிறது.

பா.ஜனதாவுக்கு பின்னடைவு

கர்நாடகத்தை பொறுத்தவரையில் பா.ஜனதா இதுவரை சொந்த பலத்தில் ஆட்சியை பிடிக்கவில்லை. அதனால் வருகிற சட்டசபை தேர்தலில் எப்படியாவது தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பா.ஜனதா தீவிரமாக பணியாற்ற தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் பலம் வாய்ந்த காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்க துடித்து வருகிறது. இன்னொருபுறம் ஜனதா தளம்(எஸ்) கட்சியும் அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிப்போம் என்று கூறி வருகிறது.

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் ஒரு தனியார் செய்தி நிறுவனம் மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. மாநிலம் முழுவதும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் கருத்துகள் சேகரிக்கப்பட்டு அந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் ஆளும் பா.ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்படும் என்றும், காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் தெரியவந்துள்ளது.

கடும் போட்டி இருக்கும்

அதாவது மொத்தம் 224 தொகுதிகளில் ஆளும் பா.ஜனதா 92 முதல் 96 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 102 முதல் 106 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 20-ல் இருந்து 24 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. ஒட்டுமொத்தமாக முதல்-மந்திரி வேட்பாளர்களில் யாரை ஆதரிப்பீர்கள் என்ற கேள்விக்கு சித்தராமையாவுக்கு 32 சதவீதம் பேரும், பசவராஜ் பொம்மைக்கு 30 சதவீதம் பேரும், குமாரசாமிக்கு 13 சதவீதம் பேரும், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருக்கு 6 சதவீதம் பேரும், பிறருக்கு 19 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியில் யாரை முதல்-மந்திரி வேட்பாளராக தேர்ந்து எடுக்க வேண்டும் என்ற கேள்விக்கு சித்தராமையாவுக்கு 57 சதவீதம் பேரும், டி.கே.சிவக்குமாருக்கு 16 சதவீதம் பேரும், பிறருக்கு 27 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மொத்தத்தில் முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையாவுக்கே அதிக ஆதரவு கிடைத்துள்ளதாக அந்த கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருப்பதால் மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படக்கூடும். ஆனால் சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜனதா-காங்கிரஸ் இடையே கடும் போட்டி இருக்கும் என்பதை மட்டும் இந்த கருத்துக்கணிப்பு உணர்த்துகிறது.

Tags:    

மேலும் செய்திகள்