மத்திய மந்திரிசபை செயலாளர் தலைமையில் ஒரே பாலின ஜோடிகளின் பிரச்சினைகள் குறித்து ஆராய குழுசுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்

ஒரே பாலின ஜோடிகளின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கு மத்திய மந்திரிசபை செயலாளர் தலைமையில் குழுவை அமைப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்தது.

Update: 2023-05-03 18:59 GMT

புதுடெல்லி, 

ஒரே பாலின ஜோடிகளின் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக ஒரே பாலின (ஆண்) ஜோடிகளான ஐதராபாத்தைச் சேர்ந்த சுப்ரியோ சக்கரவர்த்தி- அபய் தங், டெல்லியைச் சேர்ந்த பார்த் பெரோஸ் மெஹரோத்ரா- உதய்ராஜ் ஆனந்த் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகளைத் தொடுத்துள்ளனர்.

இந்த வழக்குகளில், வழக்குதாரர்கள் தங்களது திருமணத்துக்கு 1954-ம் ஆண்டு இயற்றப்பட்ட சிறப்பு திருமணச்சட்டத்தின்படி சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

இந்த வழக்குகளை ஒரே வழக்காக இணைத்து, சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், எஸ்.ஆர்.பட், ஹிமா கோலி, பி.எஸ்.நரசிம்மா ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

ஒரே பாலின ஜோடிகளின் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதை கோர்ட்டு தீர்மானிப்பதை விட நாடாளுமன்றத்தின் முடிவுக்கு விட்டு விட வேண்டும் என்று மத்திய அரசு கூறி வருகிறது.

கடந்த 27-ந் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஒரு பாலின ஜோடிகள் கூட்டாக வங்கிக்கணக்கைத் தொடங்குதல், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் வாழ்க்கைத்துணைவரை 'நாமினி'யாக நியமித்தல், ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட சமூக நலத்திட்டங்களை, இவர்களின் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்காமல் எப்படி செயல்படுத்துவது என மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியது.

இந்த நிலையில், 7-வது நாளக இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன் நடந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். அவர் நீதிபதிகளிடம் கூறியதாவது:-

ஒரே பாலின ஜோடிகளின் சில உண்மையான மனிதாபிமான கவலைகள் மற்றும் அவற்றை நிர்வாக ரீதியாக நிவர்த்தி செய்ய ஏதாவது செய்ய முடியுமா என்பது பற்றி கோர்ட்டு கேள்வி எழுப்பியது. இது தொடர்பாக விவாதங்கள் நடந்தன. இதில் அமைச்சகங்கள் இடையே ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது. எனவே மத்திய மந்திரிசபை செயலாளர் அந்தஸ்துக்கு குறையாத உயர் அதிகாரி தலைமையில் குழு அமைக்க மத்திய அரசு விருப்பம் கொண்டுள்ளது. இதற்கு சுப்ரீம் கோர்ட்டின் ஒப்புதல் தேவை.

மேலும் இதில் வழக்குதாரர்கள் தங்களது ஆலோசனைகளையும், தாங்கள் சந்திக்கிற பிரச்சினைகளையும் தரலாம். அதைக் குழு ஆராயும். தீர்வும் காண வழிவகை செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். வழக்குதாரர்கள் தங்கள் தரப்பு ஆலோசனைகளை அட்டார்னி ஜெனரல் அல்லது சொலிசிட்டர் ஜெனரலிடம் தரலாம் என கூறினர்.

தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், வழக்கின் இரு தரப்பு வக்கீல்களும் கூடி, பிரச்சினைகளை விவாதிக்கலாம் என்றார். அதை சொலிசிட்டர் ஜெனரல் துஷார மேத்தாவும் ஏற்றுக் கொண்டார். வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்