நேரு, இந்திராவை விமர்சிப்பதா? பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கண்டனம்

பிரதமராக நாடாளுமன்றத்தில் மோடி ஆற்றும் கடைசி உரை இதுவாக இருக்கும் என காங்கிரஸ் கூறியுள்ளது.

Update: 2024-02-06 07:41 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ந் தேதி தொடங்கியது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய கடைசி கூட்டத்தொடர் இதுவாகும். ஆண்டின் முதலாவது கூட்டத்தொடர் என்பதால், இரு அவைகளும் அடங்கிய கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். 1-ந் தேதி, இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது இரு அவைகளிலும் விவாதம் நடத்தப்பட்டது.

அதன்படி பிற்பகலில், மக்களவையில் பிரதமர் மோடி பதில் அளித்து பேசினார். அப்போது அவர் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். இந்திய மக்களின் திறமையை நேரு, இந்திரா காந்தி நம்பவில்லை, நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தனர் என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி கடுமையாக பேசினார்.

இந்தநிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-

மக்களவையில் பிரதமர் மோடி நேற்று மிகவும் மோசமாக நடந்து கொண்டார். அதேபோல இன்றும் மாநிலங்களவையில் அவரது செயல்பாடு இருக்கும். நேருவை அவர் அரசியல் ரீதியாக தாக்கவில்லை. தனிப்பட்ட முறையில் தாக்கி உள்ளார். 

வாஜ்பாய், அத்வானி போன்ற பா.ஜ.க. மூத்த தலைவர்கள் இது போன்ற ஒரு வார்த்தையை பயன்படுத்தவில்லை. பிரதமர் மோடி இவ்வாறு செய்ததன் மூலம் அவர் வகிக்கும் பதவியை இழிவுபடுத்திவிட்டார்.  பிரதமர் மோடி இவ்வாறு பேசியதன் மூலம், தான் ஒரு புத்திசாலி என்று நினைத்துக்கொள்கிறார். உண்மையில் அவர் வகிக்கும் பதவிக்கு இது அழகல்ல. பிரதமராக மக்களவையில் மோடி ஆற்றும் கடைசி உரை இதுவாக இருக்கும் என்று இந்திய மக்கள் மற்றும் இளைஞர்கள் முடிவு செய்து விட்டதாக அதில் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்