வருமானவரி மறுமதிப்பீட்டுக்கு எதிரான காங்கிரஸ் மனு தள்ளுபடி

நான்கு ஆண்டு கால வரி மறுமதிப்பீட்டுக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

Update: 2024-03-28 23:02 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி, வருமானவரித்துறை நடவடிக்கையில் சிக்கி உள்ளது. வருமானவரி பாக்கி ரூ.132 கோடியை செலுத்தக்கோரி, வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. அதை ரத்து செய்யக்கோரி, வருமானவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் காங்கிரஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. டெல்லி ஐகோர்ட்டிலும் அதன் மேல்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டது.

2014-2015 முதல் 2016-2017 வரையிலான மதிப்பீட்டு ஆண்டுகளுக்கு காங்கிரஸ் கட்சியின் வருமானம் குறித்து வருமானவரி மறுமதிப்பீட்டு நடவடிக்கையை வருமானவரித்துறை தொடங்கியது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு கடந்த வாரம் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், 2017-2018 முதல் 2020-2021 வரை 4 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான காங்கிரஸ் கட்சியின் வருமானத்தையும் மறுமதிப்பீடு செய்யும் நடவடிக்கையை வருமானவரித்துறை தொடங்கியது.

அதற்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் காங்கிரஸ் கட்சி மனு தாக்கல் செய்தது. அம்மனு, நீதிபதிகள் யஷ்வந்த் வர்மா, புருஷைந்திரகுமார் கவுரவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

மறுமதிப்பீட்டு நடவடிக்கையில் தலையிடுவது இல்லை என்ற கடந்த வார முடிவின் அடிப்படையில், இந்த மனுவும் தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்