செந்தில்பாலாஜி அமைச்சராக நீடிப்பது தவறில்லை.. சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்

எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய அனைத்து தரப்புக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.

Update: 2023-07-28 12:00 GMT

புதுடெல்லி,

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதை எதிர்த்து அதிமுக முன்னாள் எம்.பி.ஜெயவர்த்தன் மற்றும் ராமச்சந்திரன் தொடர்ந்த வழக்கும், வழக்கறிஞர் எம்.எல்.ரவி தொடர்ந்த வழக்கும் இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தனது வாதங்களை முன்வைத்தார். அப்போது அவர் அரசியல் சாசன பிரிவுகளையும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளையும் சுட்டிக்காட்டி, அமைச்சரவைக்கு இணையாக நிர்வாகம் நடத்த கவர்னருக்கு அரசியல் சட்டம் அதிகாரம் வழங்கவில்லை என தெரிவித்தார்.

மேலும், ஒரு குற்ற வழக்கில் ஒருவர் தண்டிக்கப்பட்டால் தவிர, ஒருவர் அமைச்சராக நீடிக்க எந்த தகுதியிழப்பும் இல்லை என வாதிட்டார். குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டவர்கள், அமைச்சராக நீடிக்க அரசியல் சட்டமோ, சட்ட விதிகளோ தடை செய்யவில்லை என சுப்ரீம்கோர்ட்டே தெரிவித்துள்ளதாக அவர் வாதிட்டார்.

தொடர்ந்து இந்த வழக்கில் எம்.எல்.ரவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சக்திவேல் தனது பதில் வாதத்தில், "அமைச்சரவை ஆலோசனைப்படி கவர்னர் செயல்பட வேண்டும் என்றாலும் கூட, அதிலும் சில விதிவிலக்குகள் உள்ளது என்றும், ஒரு குற்றப்பிண்ணனியில் உள்ளவர் சாட்சிகளை கலைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கருதியே, அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதை விரும்பவில்லை என்று கவர்னர் முதல் அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த விவகாரத்தில் முதல் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசெல்லாமல் கவர்னர் எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை." என அவர் தெரிவித்தார்.

முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடும்போது, தன் கண்முன்னே நடக்கும் சட்டவிரோதத்தை கண்டு சட்ட அதிகாரம் இல்லை என கவர்னர் இருக்கமுடியாது என்றும், சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி அரசு பணிகள் செய்யமுடியாது என்பதனால், அவர் அமைச்சராக நீடிக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதை விரும்பவில்லை என கவர்னர் தெரிவித்துள்ளார். அந்த வகையில் அவர் அமைச்சராக நீடிக்க முடியாது என வாதிட்டார்.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்கள் முடிவடைந்ததை அடுத்து எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய அனைத்து தரப்புக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணை அடுத்தவாரம் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்