மத்திய அரசை கண்டித்து டெல்லியில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் போராட்டம்

மத்திய அரசை கண்டித்து டெல்லியில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் போராட்டம் நடத்தி வருகிறார்.

Update: 2024-02-08 06:21 GMT

புதுடெல்லி,

மத்திய பாஜக அரசின் இடைக்கால பட்ஜெட் கடந்த 1-ந் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவதாக கடும் விமர்சனங்கள் எழுந்தன. நிதி ஒதுக்கீடு செய்வதில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தென் மாநிலங்கள் போர்க்கொடி உயர்த்தி வருகின்றன.

கர்நாடகத்திற்கு அநீதி இழைத்துள்ளதாக மத்திய அரசை கண்டித்து கர்நாடக காங்கிரஸ் அரசு ,டெல்லி ஜந்தர் மந்தரில் பிப்ரவரி 7-ந்தேதி (நேற்று) போராட்டம் நடத்தியது. முதல் மந்திரி சித்தராமையா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், தினேஷ் குண்டுராவ், கே.எச்.முனியப்பா, எச்.கே.பட்டீல், ராமலிங்கரெட்டி, எச்.சி.மகாதேவப்பா உள்பட மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் என சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.அவர்கள் மத்திய அரசை கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தங்களின் கைகளில் ஏந்தியிருந்தனர்.

இந்த நிலையில், நிதி பங்கீட்டில் அநீதி இழைப்பதாக கூறி மத்திய அரசை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில், எம்.பிக்கள், இடதுசாரி கட்சி தலைவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்துக்கு தமிழ்நாட்டில் ஆளும் தி.மு.க ஆதரவு தெரிவித்துள்ளது. தி.மு.க. சார்பில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றுள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்திய அரசை கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். மேலும் மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் உள்ள கேரள பவனில் இருந்து ஜந்தர் மந்தர் நோக்கி பேரணி நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்