மராட்டியம்: மதிய உணவு திட்டத்தில் புதுமை - பள்ளி மாணவர்களுக்கு முட்டை பிரியாணி

வாரத்தில் ஒருநாளில் அதாவது புதன் அல்லது வெள்ளிக்கிழமைகளில் இந்த புதிய உணவு வகை வழங்கப்படும்.

Update: 2023-11-08 17:19 GMT

மும்பை,

பள்ளிக்கு வரும் ஏழை குழந்தைகள் பசியின்றி படிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜரால் கொண்டு வரப்பட்ட மதிய உணவு திட்டம், தற்போது நாடு முழுவதும் பரவலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மராட்டியத்திலும் அரசு பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை மதிய உணவு திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்தநிலையில் மராட்டிய அரசு மதிய உணவு திட்டத்தில் புதுமையாக மாணவர்களுக்கு முட்டை பிரியாணி வழங்க முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அந்த மாநில அரசு வெளியிட்டு உள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

மராட்டிய அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவில் அவித்த முட்டை அல்லது முட்டை புலாவ் அல்லது முட்டை பிரியாணி வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. வாரத்தில் ஒருநாளில் அதாவது புதன் அல்லது வெள்ளிக்கிழமைகளில் இந்த புதிய உணவு வகை வழங்கப்படும். அசைவம் சாப்பிடாத மாணவர்களுக்கு மதிய உணவுடன் வாழைப்பழம் அல்லது வேறு சத்துள்ள பழ வகைகள் வழங்கப்படும். இந்த புதுமை திட்டம் நடப்பு கல்வியாண்டு முதலே நடைமுறைக்கு கொண்டு வரப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த புதுமை மதிய உணவு திட்டத்தால் மாநிலம் முழுவதும் சுமார் 2 கோடி மாணவர்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்