நமது அரசை தூக்கி எறிவதுதான் எதிர்க்கட்சிகளின் நோக்கம்: பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் மோடி பேச்சு

அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்ததாக கூறி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அடுத்தடுத்து நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர்.

Update: 2023-12-19 10:38 GMT

புதுடெல்லி:

நாடாளுமன்ற மக்களவைக்குள் பலத்த பாதுகாப்பையும் மீறி 2 நபர்கள் அத்துமீறி நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் புயலை கிளப்பி உள்ளது. நாடாளுமன்ற அவைக்குள் சிலர் அத்துமீறலில் ஈடுபட்டது பற்றி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அறிக்கை அளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன.

அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்ததாக கூறி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அடுத்தடுத்து சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர். இன்று மேலும் 49 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதன்மூலம் நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் சஸ்பெண்டு செய்யப்பட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்தது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், டெல்லியில் உள்ள நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில், பாஜக நாடாளுமன்ற கட்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, நாடாளுமன்ற அத்துமீறல் குறித்து கண்டனம் மற்றும் கவலை தெரிவித்தார். சில எதிர்க்கட்சிகள் இந்த செயலை நியாயப்படுத்த முயற்சிப்பது மேலும் கவலை அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.

இந்தியா கூட்டணியின் கூட்டம் குறித்து பேசிய பிரதமர் மோடி, "நமது அரசாங்கத்தை தூக்கி எறிவதுதான் அவர்களின் நோக்கம். ஆனால் நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்தை உறுதி செய்வதே நமது அரசின் இலக்கு" என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்