சட்டப்பிரிவு-370 ரத்து: தீர்ப்புக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு பிரதமர் அளித்த வாக்குறுதி

2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று நாடாளுமன்றம் எடுத்த முடிவை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தியிருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Update: 2023-12-11 11:34 GMT

புதுடெல்லி:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டம் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து குடியரசுத் தலைவர் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த தீர்ப்பு குறித்து அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

370வது சட்டப்பிரிவை ரத்து செய்தது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றும், 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று நாடாளுமன்றம் எடுத்த முடிவை அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தியிருப்பதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மேலும், ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதாக உறுதி அளித்துள்ளார். முன்னேற்றத்தின் பலன்கள் மக்களை சென்றடைவது மட்டுமல்லாமல், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370-ன் காரணமாக பாதிக்கப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கும் வழங்குவதை உறுதி செய்வதில் உறுதியாக இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

"இந்த தீர்ப்பானது, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்களுக்கு நம்பிக்கை, முன்னேற்றம் மற்றும் ஒற்றுமைக்கான உறுதியான அறிவிப்பு ஆகும். இது வெறும் சட்டப்பூர்வ தீர்ப்பு மட்டுமல்ல; இது நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகவும், பிரகாசமான எதிர்காலத்திற்கான வாக்குறுதியாகவும், வலிமையான ஒன்றுபட்ட இந்தியாவை கட்டியெழுப்புவதற்கான நமது உறுதிப்பாட்டின் சான்றாகவும் உள்ளது." என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்