ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் குறைந்துள்ளது - மத்திய அரசு

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் குறைந்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Update: 2022-07-20 12:55 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில், காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த ராய், எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

அதில், ஜம்மு காஷ்மீரில் கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து குறைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் கடந்த 2018-ம் ஆண்டு 417 பயங்கரவாத தாக்குதல்கள் நடந்ததாகத் தெரிவித்துள்ள அவர், இது கடந்த 2019-ல் 255 ஆகவும், 2020-ல் 244 ஆகவும், 2021-ல் 229 ஆகவும் குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2018-ல் நடந்த தீவிரவாத தாக்குதல்களில் 91 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதாகவும், இது 2019-ல் 80 ஆகவும், 2020-ல் 62 ஆகவும், 2021-ல் 42 ஆகவும் குறைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேபோல், 2018-ல் நடந்த தீவிரவாத தாக்குதல்களில் பொதுமக்கள் 39 பேர் கொல்லப்பட்டதாகவும், இது 2019-ல் 39 ஆகவும், 2020-ல் 37 ஆகவும், 2021-ல் 41 ஆகவும் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் சிறுபான்மையினரின் நிலை குறித்த மல்லிகார்ஜூன கார்கேவின் மற்றொரு கேள்விக்கு பதில் அளித்துள்ள நித்யானந்த ராய், கடந்த 2 மாதங்களில் சிறுபான்மை பண்டிட் சமூகத்தினருக்கு எதிராக 2 தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும், இதில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், ஒருவர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்