புல்வாமா தாக்குதல் தினம்.. உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி

புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

Update: 2024-02-14 06:33 GMT

புதுடெல்லி:

ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையின் புல்வாமா பகுதியில், கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி ராணுவ வாகனங்கள் அணிவகுத்து சென்றபோது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு தலைவர்கள் மரியாதை செலுத்துகின்றனர்.

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களை நினைவுகூர்ந்து, பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:-

புல்வாமாவில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதையையும் அஞ்சலியையும் செலுத்துகிறேன். நமது தேசத்துக்காக அவர்கள் ஆற்றிய சேவையும் தியாகமும் என்றும் நினைவில் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இந்தியாவில் நடந்த மிக மோசமான தாக்குதல்களில் ஒன்று இந்த புல்வாமா தாக்குதல். ராணுவத்தைச் சேர்ந்த 78 வாகனங்கள் அணிவகுத்து சென்றபோது, அதில் ஒரு பேருந்தின் மீது வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் திடீரென மோதியது. மோதிய வேகத்தில் கார் வெடித்து சிதறியது. காருடன் பேருந்தும் வெடித்து சிதறி தீப்பிடித்தது.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. தற்கொலை தாக்குதலை நடத்திய நபர், காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த அதிர் அகமது தார் என்று அடையாளம் காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்