'ஐஸ்கிரீம்' சாப்பிட்ட இரட்டை குழந்தைகள் திடீர் உயிரிழப்பு

கர்நாடகாவில் ‘ஐஸ்கிரீம்’ சாப்பிட்ட இரட்டை குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.

Update: 2024-04-19 01:21 GMT

பெங்களூரு,

கர்நாடகா மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா பெட்டஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பிரசன்னா. இவரது மனைவி பூஜா. இந்த தம்பதிக்கு 1½ வயதில் திரிசூல், திரிஷா என இரட்டை குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் அந்தப்பகுதியில் தள்ளுவண்டியில் ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

அந்த தள்ளுவண்டி வியாபாரியிடம் பூஜா தனது குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்துள்ளார். அத்துடன் அந்தப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் அவரிடம் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டுள்ளனர். அந்த ஐஸ்கிரீமை சாப்பிட்ட சிறிது நேரத்தில் பூஜாவின் இரட்டை குழந்தை களான திரிசூல் மற்றும் திரிஷாவுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பூஜா, தனது குழந்தைகளை ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அங்கு குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இரவில் உடல் நிலை மோசமானதை தொடர்ந்து இரட்ைட குழந்தைகள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் அரகெரே போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து இரட்டை குழந்தைகளின் உடல் பிரேத பரிசோதனைக்காக மண்டியா மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இரட்டை குழந்தைகள் திரிசூல், திரிஷா இறந்ததற்கான காரணம் தெரியவில்லை. இதற்கிடையே ஐஸ்கிரீம் சாப்பிட்டதால் தான் குழந்தைகள் இறந்ததாக பூஜா குற்றம்சாட்டி உள்ளார்.

இதனால் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே குழந்தைகள் இறப்புக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். மேலும் குழந்தைகள் சாப்பிட்ட ஐஸ்கிரீமையும் போலீசார் ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் ஐஸ்கிரீம் வியாபாரியை பிடித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

ஐஸ்கிரீம் சாப்பிட்டு இரட்டை குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்