அதானி விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்கு இவ்வளவு பயம் ஏன்? பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

அதானி விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்கு இவ்வளவு பயம் ஏன்? என பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2023-03-27 16:41 GMT

அதானி விவகாரம்

இந்தியாவின் பிரபல தொழிலதிபரும், உலக பணக்காரர்களில் ஒருவருமான அதானிக்கு சொந்தமான நிறுவனங்கள், பங்குச்சந்தையில் மோசடியில் ஈடுபட்டதாகவும், கணக்குகளில் முறைகேடு செய்ததாகவும் அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம் சாட்டியிருந்தது. இந்த விவகாரம் இந்தியாவில் பெரும் அரசியல் புயலை கிளப்பி இருக்கிறது. இந்த பிரச்சினை தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

அதானி பிரச்சினையை முன்வைத்து மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குறைகூறி வருகிறார். இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி

அந்தவகையில் அதானி விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை மீண்டும் அவர் சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'எல்.ஐ.சி.யின் மூலதனம் அதானிக்கு. பாரத ஸ்டேட் வங்கியின் மூலதனம் அதானிக்கு. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மூலதனம் அதானிக்கு. அதானி முறைேகடு வெளிச்சத்துக்கு வந்த பிறகும் பொதுமக்களின் ஓய்வூதிய பணம் ஏன் அதானியின் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுகிறது?' என கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் அவர், 'திரு.பிரதமரே, விசாரணை இல்லை, பதில் இல்லை. ஏன் இவ்வளவு பயம்?' என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார். முன்னதாக, அதானி விவகாரத்தில் மத்திய அரசை நோக்கி கேள்வி எழுப்பியதாலேயே தன்னை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்திருப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார்.

ஆனால் தனது வாழ்நாள் முழுவதும் தன்னை நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்தாலும், இந்த பிரச்சினையை தொடர்ந்து எழுப்பிக்கொண்டுதான் இருப்பேன் என்றும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்