சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் 33 சதவீத நீர் நிலைகள் மாயம் அதிர்ச்சி தகவல்

கடந்த 10 ஆண்டுகளில் சென்னை மாநகரில் இருந்த 33 சதவீத நீர் நிலைகள் தற்போது காணாமல் போய்விட்டதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

Update: 2018-03-09 11:21 GMT
சென்னை,

சென்னை மாநகரின் ஒட்டுமொத்த வரைபடத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகம் தயாரித்த ஆய்வறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆய்வறிக்கையில், பருவ நிலை மாற்றம் மற்றும் சென்னையின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் ஏற்படும் கடும் வெள்ளப் பெருக்கு போன்றவை குறித்து ஆய்வு செய்யபட்டதில் கடந்த 2006ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 24 சதவீத விளை நிலங்கள் தற்போது இல்லாமல் போனதாகவும், தரிசு நிலப்பரப்பு 15 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும், குடியிருப்புப் பகுதி 13 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் கூறுகிறது.

மாநில திட்டத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இந்த ஆய்வறிக்கையில் மற்றொரு முக்கிய விஷயமும் அடங்கியுள்ளது. அதாவது, கடந்த 10 ஆண்டுகளில் மாநகரின் வெப்பநிலையானது 1.1 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயர்ந்திருப்பதாகவும், குறைந்தபட்ச வெப்பநிலையில் 0.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயர்ந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதாவது, சென்னை மாநகரின் குறைந்தபட்ச வெப்பநிலை மற்றும் அதிகபட்ச வெப்பநிலை இரண்டுமே கடந்த 10 ஆண்டுகளில் உயர்ந்திருப்பதை இந்த ஆய்வறிக்கை தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது.

இதே போல அடுத்த பத்து ஆண்டுகளிலும் வெப்பநிலை கணிசமாக உயரும் என்பதையும் அது சுட்டிக்காட்டத் தவறவில்லை.

மேலும், மாறிவரும் பருவகாலத்தால், சென்னையில் மிகக் குறைந்த மழைக்காலமும், அதிக வெயில் காலமும் நிலவும் என்றும் எச்சரித்துள்ளது.

அதிக வெள்ளம் சூழும் பகுதிகளாக வேளச்சேரி மற்றும் முடிச்சூர் பகுதிகளை கண்டறிந்து, அப்பகுதிகளில் எதிர்காலத்தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை தவிர்க்க வேண்டும் என்றால், ஒக்கியம் மடுவு பகுதியின் அகலத்தை 150 மீட்டரில் இருந்து 200 மீட்டராக அதிகரித்தால், வெள்ள பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்