நடிகர் விஜயகுமார் வீட்டுக்குள் நுழைந்த வனிதா வெளியேற்றம் சுப்ரீம் கோர்ட்டு வழக்கை சுட்டிக்காட்டி போலீசார் நடவடிக்கை

நடிகர் விஜயகுமார் வீட்டுக்குள் நுழைந்த அவருடைய மகள் வனிதாவை போலீசார் வெளியேற்றினார்கள்.

Update: 2018-12-07 22:15 GMT
பூந்தமல்லி,

சென்னை மதுரவாயல், ஆலப்பாக்கம், அஷ்டலட்சுமி நகர் 19-வது தெருவில் நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த வீடு சினிமா படப்பிடிப்புக்காக வாடகைக்கு விடப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் விஜயகுமாரின் மகள் வனிதா படப்பிடிப்பு நடத்த வேண்டும் எனக்கூறி இந்த வீட்டை வாடகைக்கு எடுத்தார்.

ஆனால் படப்பிடிப்பு முடிந்த பிறகும் அந்த வீட்டை அவர் காலி செய்யவில்லை. இதனால் நடிகர் விஜயகுமார் இதுபற்றி மதுரவாயல் போலீசிலும், போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் நடிகை வனிதா மற்றும் அவரது நண்பர்களை அந்த வீட்டில் இருந்து வெளியேற்றினர். அப்போது வனிதாவின் நண்பர்கள் தகராறில் ஈடுபட்டதால் போலீசார் அவர்கள் மீது வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இதனைத் தொடர்ந்து தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட்டில் வனிதா மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு வனிதாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வனிதா, தனது வக்கீலுடன் அந்த பங்களாவுக்கு வந்தார். வீட்டின் பூட்டுகளை உடைத்து உள்ளே சென்ற அவர் தனது மகளுடன் வீட்டில் தங்கியிருந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த மதுரவாயல் போலீசார், கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெறும்போது வீட்டுக்குள் வந்தது ஏன்? என்பது பற்றி கேட்டனர். தன்னிடம் இருந்த சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசை வனிதா போலீசாரிடம் காண்பித்ததால் அவர்கள் அங்கு இருந்து சென்றனர்.

இந்த நிலையில் நேற்று நடிகர் விஜயகுமார் சார்பில் மதுரவாயல் போலீசில் புகார் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், வனிதா வீட்டின் கண்காணிப்பு கேமரா மற்றும் வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தியதாக கூறப்பட்டு இருந்ததாக தெரிகிறது.

அதன்பேரில் மதுரவாயல் போலீசார் நேற்று வீட்டுக்கு வந்து வனிதாவிடம் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். “உங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று மட்டுமே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த வீட்டிற்குள் நுழைய அனுமதி கொடுக்கவில்லை” என போலீசார் வனிதாவிடம் தெரிவித்தனர்.

அப்போது வனிதா தரப்பினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் சுப்ரீம் கோர்ட்டு வழக்கை சுட்டிக்காட்டி வனிதாவை வீட்டில் இருந்து வெளியேற்றி கதவை பூட்டினார்கள். பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள்.

‘இந்த விவகாரம் தொடர்பாக நான் சுப்ரீம் கோர்ட்டில் சட்டப்படி பார்த்துக்கொள்கிறேன்’ என வனிதா கூறியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பங்களா முன்பு ஏராளமான காவலாளிகள் பாதுகாப்பிற்கு நிற்கவைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்