வெளிநாட்டு பயணத்தின்போது தொழில் முதலீடுகள் ஈர்ப்பு: எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் ராமதாஸ் பாராட்டு

வெளிநாட்டு பயணத்தின்போது தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டதற்காக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Update: 2019-09-10 20:45 GMT
சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாயில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட பயணத்தின்போது, தமிழ்நாட்டில் ரூ.8,830 கோடி முதலீடு செய்வதற்கான 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. தமிழகத்தில் கணிசமான எண்ணிக்கையில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் இந்த அளவுக்கு முதலீடு திரட்டப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க சாதனையாகும்.

எனினும் அரசின் பணிகள் இத்துடன் முடிவடைந்துவிடவில்லை. புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு, அவை தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை கொண்டு வருவதை உறுதி செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, தொழில் தொடங்குவதற்கு சாதகமாக தமிழகத்தில் உள்ள அம்சங்களை சந்தைப்படுத்தி அதன் மூலம் உலக அரங்கில் இருந்து கணிசமான அளவில் தொழில் முதலீடுகளைத் திரட்ட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதேபோல், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு சென்று வெற்றிகரமாக திரும்பியிருப்பது பாராட்டுக்குரியது. அவரது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தால் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் நன்மை ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால், வெற்றிப்பயணத்தை முடித்துவிட்டு தமிழகம் திரும்பியிருக்கின்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு த.மா.கா. சார்பில் பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்