வடமதுரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் - காவலர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை

சார்பு ஆய்வாளர் மற்றும் 2 தலைமை காவலர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-04-27 09:18 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையைச் சேர்ந்த செந்தில்குமார் என்ற வாலிபர் மீது, கடந்த 2010 ஆம் ஆண்டு அதே ஊரில் நடந்த திருவிழாவில் கத்தியைக் காட்டி மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து செந்தில்குமாரையும், அவரது தம்பியையும் விசாரணைக்காக அழைத்துச் சென்ற போலீசார், அவர்கள் இருவரையும் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட செந்தில்குமார் உயிரிழந்தார். இது குறித்து செந்தில்குமாரின் தம்பி அளித்த புகாரானது, கடந்த 2014 ஆம் ஆண்டு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த விசாரணையின் அடிப்படையில் காவல்நிலையத்தில் பணிபுரிந்த சார்பு ஆய்வாளர் திருமலை முத்துச்சாமி மற்றும் தலைமை காவலர்கள் பொன்ராம் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய இரண்டு பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி குற்றம் சாட்டப்பட்ட சார்பு ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர்கள் 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், சார்பு ஆய்வாளர் திருமலை முத்துச்சாமிக்கு 6 ஆயிரம் ரூபாய் அபராதமும், தலைமை காவலர்கள் பொன்ராம் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய இரண்டு பேருக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

மேலும் செய்திகள்