பாதிப்பு, உயிரிழப்பு குறைகிறது: தமிழகத்தில் 14,016 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 14,016 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2021-06-13 19:51 GMT
சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அந்த வகையில் நேற்று தமிழகத்தில் 15 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. அதேபோல் உயிரிழப்பு ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், நேற்று 267 ஆக குறைந்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 68 ஆயிரத்து 663 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 7,839 ஆண்கள், 6,177 பெண்கள் என மொத்தம் 14 ஆயிரத்து 16 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவரும், வெளிமாநிலத்தில் இருந்து வந்த ஒருவரும், 12 வயதுக்கு உட்பட்ட 532 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 2,213 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 2 கோடியே 92 லட்சத்து 5 ஆயிரத்து 623 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 13 லட்சத்து 78 ஆயிரத்து 385 ஆண்களும், 9 லட்சத்து 75 ஆயிரத்து 298 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேரும் உள்பட 23 லட்சத்து 53 ஆயிரத்து 721 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில் 12 வயதுக்கு உட்பட்ட 85 ஆயிரத்து 116 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 3 லட்சத்து 38 அயிரத்து 447 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர். கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 187 பேரும், தனியார் மருத்துவமனையில் 80 பேரும் என 267 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர்.

அந்தவகையில் நேற்று கோவை அரசு மருத்துவமனையில் 12 வயது சிறுமி கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார். கடந்த 7-ந் தேதி கோவையை சேர்ந்த சிறுமி காய்ச்சல், இருமல் உள்பட கொரோனா அறிகுறிகளுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவு 8-ந் தேதி வந்தது.

அதில் சிறுமிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி உயிரிழந்தார்.

அந்தவகையில், அதிகபட்சமாக சென்னையில் 27 பேரும், கோவையில் 19 பேரும், ராணிப்பேட்டையில் 18 பேரும், செங்கல்பட்டில் 16 பேரும், திருவள்ளூரில் 15 பேரும், திண்டுக்கல், காஞ்சீபுரத்தில் தலா 13 பேரும், சேலம், திருச்சியில் தலா 11 பேரும், திருவாரூர், தென்காசி, நாகப்பட்டினம், கன்னியாகுமரியில் தலா 8 பேரும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரையில் தலா 7 பேரும், நெல்லை, நாமக்கல், கள்ளக்குறிச்சியில் தலா 6 பேரும், தூத்துக்குடி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், தருமபுரி, கடலூரில் தலா 5 பேரும், விருதுநகர், தஞ்சாவூரில் தலா 4 பேர் உள்பட நேற்று மட்டும் 35 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 69 பேர் இணை நோய் அல்லாதவர்கள் ஆவர். அந்தவகையில் தமிழகத்தில் இதுவரை 29 ஆயிரத்து 547 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து 25,895 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் 21 லட்சத்து 74 ஆயிரத்து 247 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 1 லட்சத்து 49 ஆயிரத்து 927 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்