எதிரிகளுக்கும் உதிரிகளுக்கும் உதறல் கொடுக்கும்: மு.க.ஸ்டாலின்
முதல்- அமைச்சரின் வருகையையொட்டி திருவண்ணாமலை விழாக்கோலம் பூண்டது.;
சென்னை,
திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சியின் இளைஞர் அணி செயலாளரான துணை முதல்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொதுப்பணித்துறை அமைச்சரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவரும், முதல்- அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு எழுச்சியுரையாற்றினார். முன்னதாக மாநாட்டு நிகழ்ச்சிக்கு வந்த முதல்-அமைச்சருக்கு திமுக நிர்வாகிகள், இளைஞர் அணியினர் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். முதல்- அமைச்சரின் வருகையையொட்டி திருவண்ணாமலை விழாக்கோலம் பூண்டது.
நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் பேசுகையில், “வலதுசாரிகள் ஆக்ரோஷத்துக்கு பதிலடி நமது கொள்கைகள் தான். ஒட்டுமொத்த நாட்டையும் காக்கும் கடமை நம்மிடம் உள்ளது. அமித்ஷா அவர்களே உங்களுடைய சங்கிபடையையே கூட்டிட்டு வந்தாலும் உங்களால் இங்கு ஒன்றும் செய்ய முடியாது; தமிழ்நாட்டை வெல்ல முடியாது. அன்பாக வந்தால் அரவணைப்போம், ஆணவத்தோடு வந்தால் அடி பணிய மாட்டோம். எதிர்த்து வென்று காட்டுவோம்.
நாட்டின் பன்முகத்தன்மையை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. வரவிருக்கு சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற நீங்கள் (இளைஞர் அணி) அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். திமுக அரசின திட்டங்களைள், சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். உங்கள் ஆதரவோடும்; மக்கள் ஆதரவோடும் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்” என்று கூறினார்.
இந்த நிலையில், இதுகுறித்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
“மாஸ் காட்டிய இளைஞரணி! திராவிட மாடலின் 2.0-வுக்கான பரப்புரை திருவண்ணாமலையில் தொடங்கியது. எதிரிகளுக்கும் உதிரிகளுக்கும் உதறல் கொடுக்கும் கழகத்தின் இளம் கொள்கைப் பட்டாளமே புறப்படு! ஓய்வென்பதை மறந்து உழைத்திடு! 2026-இல் கழகத்தின் வெற்றிச் செய்தியை அளித்திடு!” என்று தெரிவித்துள்ளார்.