சென்னையில் நாளை நடக்கிறது விநாயகர் சிலைகள் பிரமாண்ட ஊர்வலம் - 18 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு

சென்னையில் விநாயகர் சிலைகள் பிரமாண்ட ஊர்வலம் நாளையும் (சனி), நாளை மறுதினம் (ஞாயிறு) நடக்கிறது. பாதுகாப்பு பணியில் 18 ஆயிரத்து 500 போலீசார் ஈடுபட உள்ளனர்.

Update: 2023-09-22 07:24 GMT

விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 18-ந்தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் இந்து அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் 1,519 பிரமாண்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நிறுவப்பட்ட விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.

சென்னையில் நாளை (சனி) மற்றும் நாளை மறுதினம் (ஞாயிறு) ஆகிய தேதிகளில் விநாயகர் சிலைகள் பிரமாண்ட ஊர்வலம் நடைபெற உள்ளது. பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலைநகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் சிலைகளை கரைப்பதற்கு போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.

விநாயகர் சிலைகள் ஊர்வலம் அசம்பாவித சம்பவங்கள் இன்றி அமைதியான முறையில் நடைபெறும் வகையில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் 16 ஆயிரத்து 500 போலீசார், 2 ஆயிரம் ஊர்காவல் படை வீரர்கள் என மொத்தம் 18 ஆயிரத்து 500 பேர் ஈடுபட உள்ளனர்.

மேலும், சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்வதற்கு 17 வழித்தடங்கள் பிரத்யேகமாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் சிலை கரைக்கும் இடங்களில் தற்காலிக கட்டுப்பாட்டறைகள் மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளது. சிலைகளை கரைக்கும் பணியில் ராட்சத கிரேன்கள் பயன்படுத்தப்பட உள்ளன. விநாயகர் சிலைகளை படகில் எடுத்து கரைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது மற்ற மாவட்டங்களில் நடைபெற்ற விநாயகர் சிலைகள் கரைப்பு நிகழ்வில் நீரில் மூழ்கி உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. எனவே இதில் சென்னை போலீசார் தனி கவனம் செலுத்தி உள்ளனர். அதன்படி, சிலைகள் கரைக்கும் இடங்களில் அவசர உதவிக்கு தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், மோட்டார் படகுகள், நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் இருப்பார்கள்.

மேலும் தடையை மீறி யாரேனும் கடலில் இறங்குகிறார்களா? என்பதை கண்காணிப்பதற்கு தற்காலிக கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்படுகிறது. அங்கிருந்து போலீசார் 'பைனாகுலர்கள்' மூலம் கடற்கரை பகுதியை கண்காணிப்பார்கள்.

விநாயகர் சிலைகள் ஊர்வலம் குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கூறுகையில், 'பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கும் நிகழ்வின்போது உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். காவல்துறையின் கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அமைதியான முறையில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்க வேண்டும்.

கட்டுப்பாடுகளை மீறுவோர் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்