சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு நேற்று மாலை தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் 5 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் சிவா தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் வெங்கடேசன், மலர்க்கொடி, மாலா, மாவட்ட இணை செயலாளர்கள் கருணாகரன், தேன்மொழி வனிதா, மாநில செயற்குழு உறுப்பினர் காந்திமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சந்திரசேகரன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
இதில் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த 100-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் சத்துணவு உண்ணும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும். அமைப்பாளர், சமையலர், உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. அதனை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும். ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.6 ஆயிரத்து 750 குடும்ப ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட 5 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். முடிவில் மாவட்ட பொருளாளர் குணசுந்தரி நன்றி கூறினார்.
பின்னர் இவர்கள் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் கொடுத்தனர்.