தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்திற்கு அமலாக்கத்துறை சம்மன்

சட்டவிரோத பணபரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக எழுந்த புகாரையடுத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது.

Update: 2023-11-23 18:45 GMT

கோப்புப்படம்

சென்னை,

தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, வேலூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக வருமானவரித்துறையினருக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

இதைத் தொடர்ந்து, அந்த தொகுதியின் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் வீட்டில் 2019-ம் ஆண்டு மார்ச் 29-ந்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ரூ.10 லட்சம் ரொக்கம் பணமும், ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.

அதேபோல், அதே ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி கதிர் ஆனந்தின் நெருங்கிய உறவினர் பூஞ்சோலை சீனிவாசன் சகோதரி வீடு, சிமெண்ட் கிடங்கு ஆகியவற்றில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி, அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.11.48 கோடியை பறிமுதல் செய்தனர். இதனால் அந்த தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டு, ஒத்தி வைக்கப்பட்டது. நிலைமை சீரான பிறகு அந்த தொகுதிக்கு மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து அமலாக்கத்துறையும், இது தொடர்பாக விசாரணையை நடத்தி வந்தது. இதன் ஒரு பகுதியாக வேலூர் தொகுதி தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்திடம் விசாரணை செய்யும் வகையில், அவர் வருகிற 28-ந்தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்