நாடாளுமன்ற தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்

நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பதற்காக சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம் செய்துள்ளனர்.

Update: 2024-04-18 04:47 GMT

சென்னை,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி, ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டத்தில் நடைபெற உள்ளது.

இதனை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டன. நேற்று மாலையுடன் கட்சிகளின் பிரசாரம் நிறைவடைந்தது. வாக்களிப்பதற்கு இன்னும் 24 மணிநேரம் கூட இல்லாத சூழலில், தேர்தல் களம் பரபரப்படைந்து உள்ளது. இந்நிலையில், வாக்களிக்க இருக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக, 10,214 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசின் போக்குவரத்துத்துறை அறிவித்து இருந்தது.

அதன்படி சென்னையில் இருந்து 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் 2,970 சிறப்பு பஸ்கள் என 2 நாட்களுக்கு மொத்தம் 7,154 பஸ்கள் இயக்கப்படுகின்றன. பிற ஊர்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 2 நாட்களுக்கு 3,060 பஸ்கள் இயக்கப்பட இருக்கின்றன.

ஏப்ரல் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்பும் வகையில் 1,825 சிறப்பு பஸ்கள் என 2 நாட்களுக்கு மொத்தம் 6,009 பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல் ஏப்ரல் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் பிற ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு திரும்ப 2,295 பஸ்கள் இயக்கப்படுகின்றன. மொத்தம் 10,214 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தினசரி இயக்கப்படும் 2,092 பஸ்கள், 807 சிறப்பு பஸ்கள் என மொத்தம் நேற்று 2,899 பஸ்கள் இயக்கப்பட்டு உள்ளன என போக்குவரத்து துறை தெரிவித்து உள்ளது. இதில், 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். இதேபோன்று, சென்னையில் இருந்து பயணம் செய்ய 46,503 பேர் இன்று வரை முன்பதிவு செய்துள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது.

Tags:    

மேலும் செய்திகள்