இந்து சமய அறநிலையத்துறை மீது திட்டமிட்டு அவதூறு- சேகர்பாபு பேட்டி

திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்வில் ஒரு செயின் பறிப்பு சம்பவம் கூட நடைபெறவில்லை.

Update: 2023-11-22 06:52 GMT

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

திமுக ஆட்சியில் அறநிலையத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்துசமய அறநிலையத்துறை மீது திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுகிறது. பரம்பரை அறங்காவலர்கள் கோவில் சொத்துகளை தவறாக பயன்படுத்தியதால், இந்து சமய அறநிலையத்துறை உருவாக்கப்பட்டது.

48 முதுநிலை கோவில்களை ஒருங்கிணைத்து சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பின் ஆயிரம் கோவில்களுக்கு மேல் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளன. திருச்செந்தூரில் 20 லட்சம் பக்தர்கள் கூடினர். ஒரு சிறு அசம்பாவிதம் கூட நடக்காமல் விழாவை நடத்திக்காட்டியது இந்து சமய அறநிலையத்துறை. திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்வில் ஒரு செயின் பறிப்பு சம்பவம் கூட நடைபெறவில்லை.

காய்ச்ச மரம்தான் கல்லடி படுவதுபோல மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனின் விமர்சனம் உள்ளது. உயர் பதவியில் இருப்பவர்கள் ஆதாரமில்லாமல், இதுபோன்ற குற்றச்சாட்டுகளை வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று சொல்வது சரியல்ல என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்